கயாஜி: எந்த அடிப்படையும் இல்லாமல், ராகுல்காந்தி அரசியல் அமைப்புகள் மீது குற்றம்சாட்டுவதாக ராஜ்நாத்சிங் பதிலடி கொடுத்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கயாஜி பகுதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ராகுல்காந்திக்கு என்ன ஆயிற்று? அவர் பாதுகாப்புப் படைகளில் இடஒதுக்கீடு பிரச்சினையை எழுப்புகிறார். பாதுகாப்புப் படைகளில் இடஒதுக்கீடு கோரி அவர் நாட்டில் அராஜகத்தை உருவாக்க முயற்சிக்கிறார். நமது படைகள் இவை அனைத்திற்கும் மேலானவை.
நாட்டை நடத்துவது குழந்தைகளுக்கான விளையாட்டு அல்ல என்பதை ராகுல்காந்தி அறிந்திருக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டுள்ளது. முடிவுபெறவில்லை. பயங்கரவாதிகள் மீண்டும் இந்தியாவைத் தாக்க முயன்றால், நாங்கள் கடுமையாக பதிலடி கொடுப்போம். இந்தியா யாரையும் தூண்டவில்லை, ஆனால் யாராவது நம்மைத் தூண்டினால், நாங்கள் அவர்களை விடமாட்டோம்.
ஆனால் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அமைப்புகளை எந்த அடிப்படையும் இல்லாமல் குறிவைக்கிறார். தனது கட்சிக்கு தோல்வி நிச்சயம் என்பது அவருக்குத் தெரியும். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது ஒரு ஊழல் வழக்கு கூட இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக தெளிவான அலை உள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அடுத்த அரசை அமைப்பது உறுதி. இவ்வாறு பேசினார்.
* வாக்கு திருட்டு மூலம் ஆட்சி அமைக்க முயற்சி: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பீகார் மாநிலம் பெட்டியா தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியின் 20 ஆண்டுகால ஆட்சியால் மக்கள் சலித்துவிட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணி வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தைப் போன்றது. எதிர்காலத்தில் நாடு தொடர்ந்து தேர்தல்களைக் காணுமா என்பதே சந்தேகம் தான்.
அரியானாவில் நடந்த வாக்கு திருட்டு குறித்து என் சகோதரர் ராகுல் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைத்தையும் அழித்துவிடும். ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? அவர்களை அதிகாரத்திலிருந்து விரட்டுங்கள். மோடி அரசு 5 ஆண்டுகள் அம்பானி மற்றும் அதானிக்காக வேலை செய்கிறது. தேர்தல்களின் போது மட்டும் மக்களிடம் திரும்பி வருகிறது. நாங்கள் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம்.
நாட்டின் செல்வம் உங்களுக்குச் சொந்தமானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்கள் முன்னோர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர். உங்கள் முன்னோர்களில் பலர் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். ஆனால், வம்ச அரசியல் இருப்பதாக மேடைகளில் இருந்து கூச்சலிடுபவர்களால் தியாகம் உள்ளிட்டவற்றை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. இது தேசத்திற்கான எங்கள் தர்மம்.
ஆனால் பா.ஜ தலைவர்கள் காலை முதல் மாலை வரை, நாட்டின் முதல்பிரதமர் நேருவை அவமதிப்பதில் மும்முரமாக உள்ளனர், நாட்டைப் பாதிக்கும் அனைத்து தீமைகளுக்கும் அவரையே குற்றம் சாட்டுகிறார்கள். அமெரிக்காவின் ஒரு பெரிய நகரமான நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவரால் நேரு இன்றும் நினைவுகூறப்படுகிறார். ஆனால் இங்கே, நேருவின் சொந்த நாட்டில், அவர் மீது தினமும் அவமானங்கள் குவிக்கப்படுவதைக் காண்கிறோம். இவ்வாறு பேசினார்.
