பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பாஜ மையக்குழு வரும் 16ம் தேதி கூடுகிறது: தலைவர்களிடையே மோதல், கூட்டணியை உறுதி செய்வது குறித்து முக்கிய ஆலோசனை
சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைமையிலான அணியில் கடந்த சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்படியே உள்ளன. கூடுதலாக இன்னும் பிற கட்சிகள் இணைய உள்ளன. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் பாஜ மட்டுமே உள்ளது. இந்த கூட்டணியில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருகின்றன. முதலில் ஆட்சியில் பங்கு என்ற பிரச்னையை பாஜ கிளப்பியது.
இதையே டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு வந்த தலைவர்கள் அனைவரும் கூறினர். அதுவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அனைத்து கூட்டத்திலும் கூட்டணி ஆட்சி என்றே கூறி வந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக தரப்பு தலைவர்கள் அதிமுக தலைமையில் தான் ஆட்சி அமையும். கூட்டணி ஆட்சி என்பது கிடையாது என்று கூறி வந்தனர். அதேசமயம் பாஜ கூட்டணியில் இருந்த ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோர் வெளியேறி உள்ளனர். கூட்டணியில் இருந்து வெளியேறிய 2 பேரும் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை கூறினர்.
அதே நேரத்தில் டிடிவி.தினகரன், முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் எடப்பாடி பழனிசாமி-செங்கோட்டையன் இடையேயான கருத்து மோதல்கள் என கூட்டணியில் பல சிக்கல்கள் நிலவி வருகின்றன. இரு நாட்களுக்கு முன்பு செங்கோட்டையன், டெல்லியில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக பாஜவின் மையக்குழு கூட்டம் வருகிற 16ம் தேதி சென்னையில் நடக்கிறது.
பாஜ தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், வானதி சீனிவாசன், எச்.ராஜா உள்ளிட்ட பாஜ மையக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக வியூகம் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளது. தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் பிரிந்து சென்ற அணிகளை இணைப்பது, கூட்டணியை உறுதி செய்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த முறை பாஜ கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக இன்னும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. அப்பா, மகன் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதேபோல அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிகவும் தங்களுடைய நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியில் இணைக்க முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக பாஜ மையக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.