Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களவை, 8 மாநில தேர்தலோடு 2024ம் ஆண்டு முடிந்தது; 2025ல் டெல்லி, பீகார், மும்பை மாநகராட்சி தேர்தல்: ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் வியூகம்

புதுடெல்லி: மக்களவை, 8 மாநில தேர்தலோடு 2024ம் ஆண்டு முடிந்த நிலையில் 2025ல் டெல்லி, பீகார், மும்பை மாநகராட்சி தேர்தல்கள் நடப்பதால் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. 2024ம் ஆண்டை ெபாருத்தமட்டில் மக்களவை மற்றும் அருணாச்சலம், சிக்கிம், ஆந்திரா, ஒடிசா, ஜம்மு -காஷ்மீர், அரியானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய எட்டு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் கடந்துவிட்டது. இன்று 2025 புத்தாண்டு பிறந்த நிலையில், பீகார், டெல்லி ஆகிய இரண்டு மாநில சட்டப் பேரவை தேர்தல்கள் இந்தாண்டு நடைபெறவுள்ளது. அத்துடன் நாட்டின் பணக்கார மாநகராட்சியான மும்பை பிஎம்சி தேர்தலும் நடைபெறவுள்ளது. டெல்லி தேர்தலை பொருத்தமட்டில் ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. முக்கிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி தவிர பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளும் களத்தில் உள்ளன. ஆம் ஆத்மி கட்சி நான்காவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயன்று வரும் நிலையில், டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சித்து வருகிறது.

அதேநேரம் டெல்லியில் இழந்த ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கட்டமைக்க காங்கிரஸ் தீவிரமாக போராடி வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலில், காங்கிரசும் ஆம்ஆத்மி கட்சியும் டெல்லியின் மொத்தமுள்ள ஏழு இடங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் சட்டப் பேரவை தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. பாஜக ஒன்றியத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தாலும் கூட, நாட்டின் தலைநகரான டெல்லியை கைப்பற்ற முடியவில்லை. டெல்லி தேர்தல் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் நிலையில், பீகார் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் தலைவரான பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய தலைவராக உள்ளார். அதேநேரம் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி, ஜித்தன் ராம் மாஞ்சியின் ஹம்கான் ஆகிய கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துள்ளன.

அதேநேரம் முக்கிய எதிர்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் கூட்டணியும் பலமாக உள்ளது. பீகாரில் மூன்றாவது அணியாக தேர்தல் வியூக நிபுணராக இருந்து அரசியல்வாதியான பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சியும், இந்த தேர்தல் களத்தில் போட்டியிடப் போகிறது. அதேபோல் ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசியின் கட்சியும் பீகார் தேர்தல் களத்தில் கால்பதிக்கவுள்ளது. பீகார் சட்டசபைத் தேர்தல், முதல்வர் நிதிஷ் குமாருக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும். தற்போது பாஜகவுக்கு அதிக எம்எல்ஏக்கள் இருந்தும் குறைந்த எம்எல்ஏக்கள் கொண்ட நிதிஷே முதல்வராக இருந்து வருகிறார். மகாராஷ்டிராவைப் போலவே பீகாரிலும் தனது கட்சித் தலைவரை முதல்வராக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. ஆனால் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்ற வியூகங்களை வகுத்து வருகிறது.

எப்படியாகிலும் நிதிஷ்குமாரை நம்பமுடியாது என்பதால், தேர்தல் நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற அச்சமும் பாஜக மத்தியில் உள்ளது. அதற்கு அடுத்ததாக மும்பை மாநகராட்சியை யார் கைப்பற்றுவது? என்பது தான். ஆளும் மகாயுதி - மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால், மும்பை மாநகராட்சியை பொருத்தமட்டில் சிவசேனா (உத்தவ்) - ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா இடையே கடும் போட்டி இருக்கும். இந்த முறை பாஜக இந்த போட்டியில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதால் உத்தவ் தாக்கரே கட்சியை எதிர்த்து பாஜக களமிறங்க திட்டமிட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த உத்தவ் தாக்கரேவின் கட்சி தற்போது, மும்பை மாநகராட்சியை தக்கவைக்க தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.