அரசியல் பிழையை மறைக்கவே எடப்பாடி சுற்றுப்பயணம் இந்திய தேர்தல் ஆணையம் பாஜ ஆணையமாகிவிட்டது: முத்தரசன் தாக்கு
சேலம்: இந்திய தேர்தல் ஆணையம் பாஜ ஆணையமாகிவிட்டது என்று முத்தரசன் தெரிவித்து உள்ளார். சேலத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: ‘‘தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் பாஜவோடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த அடிப்படையில் கூட்டணி வைத்தார் என்பதை, தனது பரப்புரையில் அவர் விளக்க வேண்டும். தான் செய்த மிகப்பெரிய அரசியல் பிழையை சரி செய்வதற்காக தேர்தல் தொடங்குவதற்கு 8 மாதத்திற்கு முன்பே பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.இந்திய தேர்தல் ஆணையம் பாஜ ஆணையமாகிவிட்டது.
பாஜ என்ன உத்தரவு போட்டாலும், அதனை நிறைவேற்றும் அடிமை அமைப்பாக மாறிவருவது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய தீங்கு. பீகாரில் 75 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒன்றிய அரசு மறுக்கிறது. தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் சிறப்பு பணி என்ற பெயரில் தமிழக வாக்காளர்களின் வாக்கு உரிமையை பறிக்க முயற்சி நடக்கிறது. பாஜவிற்கு வாக்களிக்காதவர்களை நீக்குவது என்ன ஜனநாயகம். பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களை தமிழ்நாட்டில் சேர்க்க கபட நாடகம், வஞ்சக சூழ்ச்சியை பாஜ உத்தரவை ஏற்று, தேர்தல் ஆணையம் செய்கிறது. இந்த சூழ்ச்சியை நிறைவேற்ற முயற்சித்தால், தமிழ்நாடு கொந்தளிக்கும்’’ என்று தெரிவித்தார்.