Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசியல் கட்சிகளை ஒழுங்குபடுத்த விதிகளை உருவாக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

புதுடெல்லி: அரசியல் கட்சிகளை பதிவு செய்ய, ஒழுங்குபடுத்த விதிகளை உருவாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

அண்மையில் கருப்பு பணத்தை வெள்ளையாக்க அரசியல் கட்சி தொடங்கிய நபர் ஒருவர், அரசியல் கட்சிக்காக நன்கொடைகள் வசூலித்து, பின்பு ஒரு குறிப்பிட்ட அளவு கமிஷனை கழித்து நன்கொடையாளர்களுக்கு திருப்பி தருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு எந்தவொரு விதிமுறைகளும் இல்லை. எனவே, பிரிவினைவாதிகள் நன்கொடைகளை சேகரிக்க அரசியல் கட்சியை உருவாக்கி உள்ளனர். இந்த கட்சிகளின் நிர்வாகிகள் காவல்துறை பாதுகாப்பை பெறுகின்றனர்.

அரசியல் கட்சிகள் பொதுநலனுக்காக செயல்படுவதால் அவற்றின் செயல்பாட்டில் வௌிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம். போலி அரசியல் கட்சிகள் ஜனநாயகத்துக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், கடும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், கடத்தல்காரர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பணமோசடி செய்பவர்களை தேசிய, மாநில நிர்வாகிகளாக நியமித்து அவர்களிடமிருந்து பெரும் நன்கொடைகளை பெற்று, நாட்டை அவமதிக்கின்றனர்.

எனவே, மதசார்பின்மை, வௌிப்படைத்தன்மை மற்றும் அரசியல் நீதியை மேம்படுத்துவதற்காக அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் விதிகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் வரம்புக்குள் அரசியல் கட்சிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை வலுவான ஜனநாயக செயல்பாட்டுக்கு வழிவகுக்கும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.