தமிழகம் கடந்த 21 ஆண்டுகளாகவே, போலியோ வைரஸ் பாதிப்பு இல்லாத மாநிலமாக திகழ்ந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. போலியோ நோய் என்பது ஒருவித வைரஸ் ஆகும். இது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது. போலியோ தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, தனியாக எவ்வித நோய் அறிகுறிகளும் காணப்படுவதில்லை. ஆனால், காய்ச்சல், தலைவலி, வாந்தி, தண்டுவடத்தில் இறுக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. மிகவும் சிக்கலான நேரங்களில், பாதிக்கப்பட்டவர்களின் நரம்பு மண்டலத்திற்குள் செல்லக்கூடிய போலியோ கிருமியானது, சில மணி நேரங்களிலேயே இளம்பிள்ளை பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. 200 பேரில் ஒருவருக்கு நிரந்தரமாக வாத பாதிப்பு, கால் முடக்கம் ஏற்படுகிறது. இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சுவாச தசைகள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், சுமார் 10 சதவீதம் அளவுக்கு உயிரிழப்பு ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகில் இருந்து போலியோ நோயை ஒழிக்க, உலக சுகாதார நிறுவனம் தீர்மானம் நிறைவேற்றியது. வாய் வழியாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் காரணமாக 99 சதவீதம் அளவுக்கு போலியோ பாதிப்புகள் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடைசியாக 2004ம் ஆண்டு, நெல்லை மாவட்டத்தில் போலியோ நோய் கண்டறியப்பட்டது. இந்தியா அளவில் ஹவுரா மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள மாவட்டத்தில், 2011ம் ஆண்டு போலியோ வைரஸ் இறுதியாக கண்டறியப்பட்டது. 2012ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு, போலியோ வைரஸ் பரவல் கொண்ட தொற்றுநோய் நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி, கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி போலியோவிலிருந்து விடுபட்ட நாடாக சான்றிதழ் வழங்கியது. இதன் காரணமாக, கடந்த 11 ஆண்டுகளாக, இந்தியா போலியோ இல்லாத நாடாக இருந்து வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது: தமிழகத்தில் 2004ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை, வருடத்திற்கு 2முறை, தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 2017ம் ஆண்டிலிருந்து பல சுற்றுகளாக துணை (சிறப்பு) தேசிய போலியோ சொட்டு மருந்து தினம், ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதங்களில் அதிக அளவில் பாதிப்புள்ள மாநிலங்கள் மற்றும் பகுதிகளில் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த 29 ஆண்டுகளாக, போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்று வருகிறது. போலியோ தடுப்பு முயற்சிகள் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெறுவதால், கடந்த 21 ஆண்டுகளாக போலியோ நோய் பாதின்றி தமிழகம் உள்ளது. 2018ம் ஆண்டிலிருந்து, இந்தியா போலியோ வைரஸ் நிபுணர் ஆலோசனை குழுவின் ஆலோசனை படி, துணை (சிறப்பு) தேசிய போலியோ சொட்டு மருந்து தினம் ஒரு சுற்றாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில், 57 லட்சம் குழந்தைகள் இலக்கு நிர்ணயிக்கப்பிட்டு, 59.20 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அண்டை நாடுகளில் போலியோ வைரஸ் பரவல் காணப்படுவதால், இந்தியா போலியோ வைரஸ் நிபுணர் ஆலோசனை குழு, முக்கியமான குறியீட்டு அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு, 21 மாநிலங்களிலுள்ள 269 மாவட்டங்களை பாதிக்கப்படக்கூடியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த 6 மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் முகாம் நடத்தப்பட்டு, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
போலியோ இல்லாத நிலையை தொடர்ந்து தக்க வைத்து கொள்ளவும், போலியோ வைரஸ் பரவல் வாய்ப்புகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க, போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க தமிழக சுகாதாரத்துறை ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். 2012ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு, போலியோ வைரஸ் பரவல் கொண்ட தொற்றுநோய் நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி, கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி போலியோவிலிருந்து விடுபட்ட நாடாக சான்றிதழ் வழங்கியது. இதன் காரணமாக, கடந்த 11 ஆண்டுகளாக, இந்தியா போலியோ இல்லாத நாடாக இருந்து வருகிறது.
நோய் அறிகுறிகள்:
போலியோ வைரஸ் தொண்டை குடலை பாதிக்கிறது. பிறகு மூளை, முதுகு தண்டுவடத்தை பாதிக்கும். தொண்டை வலி, காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு, கழுத்துவலி, முதுகு வலி, தலை வலி, கால் கைகள் நகர்த்துவதில் சிரமம் ஆகியவை போலியோவின் அறிகுறிகள் ஆகும்.
வைரஸ் பரவும் முறை
இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு வாய் வழியாக உடலுக்குள் செல்கிறது. பெரும்பாலும் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் மலம், சிறுநீர் போன்றவற்றின் தொடர்பு ஏற்படும் போது, எளிதாக பரவுகிறது. சில நேரங்களில், அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவுகளின் வழியாகவும் பரவுகிறது. இவ்வாறு உடலுக்குள் செல்லும் கிருமியானது, சிறுகுடல் பகுதியில் வளர்ந்து, நரம்பு மண்டலத்திற்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அலட்சியம் கூடாது
போலியோவை தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி செலுத்துவது தான். 5 வயதிற்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. எனவே, பெற்றோர்கள் அலட்சியம் காட்டாமல், தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன் வரவேண்டும்.
