சென்னை: தமிழ்நாடு 21 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக திகழ்ந்து வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, திருநீர்மலை நகர்ப்புற துணை சுகாதார நிலையத்தில், ஆறு மாவட்டங்களுக்கான போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
அதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த 29 ஆண்டுகளாக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்று வருகிறது. போலியோ தடுப்பூசி முயற்சிகள் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெறுவதால், தமிழ்நாடு கடந்த 21 ஆண்டுகளாக போலியோ நோயின்றி உள்ளது. தமிழ்நாட்டில் இறுதியாக 2004ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் போலியோ நோய் கண்டறியப்பட்டது. 21 ஆண்டுகள் தமிழ்நாடு போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் அண்டை நாடுகளில் போலியோ வைரஸ் பரவல் காணப்படுவதால், “இந்தியா போலியோ வைரஸ் நிபுணர் ஆலோசனை குழு” முக்கியமான குறியீட்டு அளவுகோள்களை அடிப்படையாகக் கொண்டு, 21 மாநிலங்களிலுள்ள 269 மாவட்டங்களை பாதிக்கப்படக்கூடியதாக அடையாளம் கண்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
6 மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 7,091 மையங்களில் நடைபெற்று வருகிறது. இம்மையங்களில் 7.88 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா, சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த் குமாரி கமலக்கண்ணன், மாநகராட்சி ஆணையர் பாலசந்தர், துணை மேயர் காமராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் சோமசுந்தரம் மண்டலக்குழுத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.