Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூச்சல் எழுப்பும் கூட்டமாக இல்லாமல் அரசியல் புரிதல் கொண்ட கொள்கை கூட்டமாக திகழ வேண்டும்: இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: கூச்சல் எழுப்பும் கூட்டமாக இல்லாமல், அரசியல் புரிதல் கொண்ட கொள்கைக் கூட்டமாக திகழ வேண்டும் என திமுக இளைஞர் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, தென்மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மயிலாப்பூர்- தியாகராய நகர் மற்றும் சென்னை வடகிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த இளைஞர் அணி, வட்ட, பாக நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டம் நடந்தது. இதில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: இன்றைக்கு பல கட்சிகள், பல இயக்கங்கள் பூத் கமிட்டி போடுவதற்கே திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆள் கிடைக்காமல் மிஸ்டு கால் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பூத்துக்கு ஒரு இளைஞர் அணி அமைப்பாளரை நியமித்துக்கொண்டு இருக்கிற ஒரே இயக்கம், நம்முடைய திமுக. இளைஞர் அணியில் நீங்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக உழைத்தீர்கள் என்றால், சரியான நேரத்தில் உங்களுக்கான அந்த அங்கீகாரத்தை தலைவர் நிச்சயம் கொடுப்பார்.

இல்லந்தோறும் இளைஞர் அணி மூலம் வீடுவீடாக சென்று இளைஞர் அணி உறுப்பினர்களை சேர்த்தோம். `ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பை, தலைவர் அறிவித்தார். இன்றைக்கு கிட்டத்தட்ட 2 கோடி பேரை கழகத்தில் உறுப்பினராக சேர்த்திருக்கிறோம் என்றால், அதில் இளைஞர் அணியின் பங்கு மிகமிக முக்கியம், தவிர்க்க முடியாத பணி. இன்றைக்கு நாம் மிக மிக முக்கியமான ஒரு கட்டத்தில் இருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலம்தான் இருக்கிறது. எனவே, வந்திருக்கக்கூடிய இளைஞர் அணி ஒவ்வொருவரும் உங்களுடைய தேர்தல் பணிகளை இன்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். 200 தொகுதிகள் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு கொடுத்திருக்கிறார்கள். நாம் களத்தில் இறங்கி சிறப்பாக செயல்பட்டோம் என்றால், 200 இல்லை 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன.

வெற்றி மட்டுமே நம் இலக்காக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு களப்பணியாற்ற வேண்டும். கூச்சல் எழுப்பும் கூட்டமாக இல்லாமல், அரசியல் புரிதல் கொண்ட கொள்கைக் கூட்டமாக திகழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், மயிலை வேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் சங்கர், ஜெ.கருணாநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் மோகன், ரத்னா லோகேஸ்வரன், பகுதி செயலாளர் ஏழுமலை, மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் தனியரசு, ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் நந்தன மதி, முரளி, அருள்தாசன், சென்னை தென்மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா அன்பழகன்உள்பட பலரும் கலந்துகொண்டனர்.