Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை என்பது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம்: ஐகோர்ட் மதுரை கிளை காட்டம்

மதுரை: காவல்நிலையங்களில் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது. மதுரை, தல்லாகுளத்தை சேர்ந்த சோமசுந்தரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ஆறுமுகம் என்பவரிடம் ரூ.3 லட்சம் கடனாக வாங்கியிருந்தேன். அதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.6 லட்சம் வரை கொடுத்து விட்டேன். ஆனால், எனது வீட்டு அசல் பத்திரங்களை வைத்துக் கொண்டு தர மறுப்பதுடன், அதிக வட்டி கேட்டு மிரட்டுகிறார்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், எனது அசல் பத்திரங்களை திருப்பி தருமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, ‘‘இதுபோன்ற புகார்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்துவதாக தெரிகிறது. இது கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு சமமாகும். வழக்கின் ஆரம்ப விசாரணையின் போது ஒரு நபருக்கு போலீசார் சம்மன் அனுப்ப இயலாது. ஆரம்ப விசாரணையின் நோக்கம் புகாரை ஆராய்வது மட்டுமே.

இந்த விசாரணையின் போது குற்றமாக கருதப்படக்கூடிய சாத்தியம் உள்ளது என்றால் காவல்துறை உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடரலாம். 173(3) பிஎன்என்எஸ் பிரிவின் கீழ் ஆரம்பகட்ட விசாரணையை, டிஎஸ்பியின் ஒப்புதலை பெற்று 14 நாட்களுக்குள் முடித்து, அதன் முடிவை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். மனுதாரர் மனுவின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் நடந்திருப்பது தெரிய வந்தால் உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்து மேல் விசாரணை நடத்த வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.