நெல்லை: நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் போலீஸ் எஸ்ஐ காத்திகேயன் தலைமையில் ஏட்டு கருணை ராஜ், காவலர் குருமகேஷ் ஆகியோர் நேற்று பொன்னாக்குடி பஜார் அருகே சென்றனர். அங்கு 2 பேர் பைக் அருகே கையில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் கேள்வி எழுப்பியபோது, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் திடீரென எஸ்ஐ கார்த்திகேயனின் கழுத்தில் அரிவாளால் வெட்ட முயன்றதாகவும், அவர் சுதாரித்து விலகினார்.
அதேபோல், ஏட்டு கருணைராஜ் அரிவாள் வெட்டில் இருந்து தப்பியதாகத் தெரிகிறது. இதையடுத்து இருவரும் பைக்கில் ஏறி தப்பிச் சென்றனர். இதுகுறித்து எஸ்ஐ கார்த்திகேயன், முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற மறுகால்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வான் மகேஷ் (25), உத்தமபாண்டியன்குளத்தைச் சேர்ந்த சூர்யா (20) ஆகியோர் கைது செய்தனர்.