Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவல்கரங்கள் சேவை மையம் மூலம் 2021 முதல் மாயமான 1,419 பேர் மீட்பு: நடப்பாண்டில் 725 பேர் மீட்பு; சென்னை காவல்துறை தகவல்

சென்னை: சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை பெருநகர காவல்துறையில் 2021 ஏப்ரல் 21ம் தேதி ‘‘காவல் கரங்கள்‘‘ உதவி மையம், 9444717100 என்ற உதவி எண்ணுடன் ஆரம்பிக்கப்பட்டு, சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு \\”மனிதம் போற்றுவோம் மனித நேயம் காப்போம்\\” என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சேவையாற்றி வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் ஆணையர் (தலைமையிடம்) கண்காணிப்பில், நவீன காவல் கட்டுப்பாட்டறை, காவல் கரங்கள் உதவி மையம் மூலம் பெறப்படும் அழைப்புகள் வீடற்ற, ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டி காவல்துறையுடன் தன்னார்வலர்கள் உதவியுடன் உடனடி உதவியும், காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அழைப்பின்பேரில், அவ்விடத்திற்கு உடனடியாக சென்று ஆதரவற்றவர்களை மீட்டு, உரிய மருத்துவ மற்றும் தங்கும் வசதி இருப்பிடங்கள் வசதிகளுள்ள அரசு மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பு இல்லங்களில் தன்னார்வலர்களின் மூலம் அனுமதிக்கப்படுகின்றனர்.

பின்னர் தொடர்ச்சியாக உதவி செய்து ஆதரவற்றவர்களின் உறவினர்ளை கண்டறிந்து மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்படுகிறது. ஆதரவற்றவர்களை மேற்குறிப்பிட்ட இல்லங்களில் சேர்த்து நல்ல முறையில் பேணி பராமரித்தும் உதவி செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த 13ம் தேதி காவல் கரங்கள் குழுவினருக்கு கிடைத்த தகவலின்பேரில், தேனாம்பேட்டை சிக்னல் அருகே இருந்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (70) என்பவர் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டார். இதேபோல நேற்று காலை, புரசைவாக்கம், நோபல் மருத்துவமனை அருகில் ஆதரவற்ற நிலையில் இருந்த ஐ.சி.எப் பகுதியை சேர்ந்த லோகநாயகி (80) என்பவரை அவரது மகனிடம் சேர்த்து வைக்கப்பட்டார்.

நடப்பு 2025ம் ஆண்டு இதுவரை ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த 725 பேர் மீட்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு விவரங்கள் சேகரித்து, அதில் 128 பேர் அவர்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை காவல் கரங்கள் சேவை மையம் மூலம் 2021ம் ஆண்டு காணாமல் போன முதல் 1,419 பேர் காணாமல் தவித்த அவர்தம் குடும்பத்துடன் மீள சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். ஆதரவற்ற உதவிகள் கோரும் நிலையில் கண்டறியப்படும் நபர்களுக்கு உதவிட காவல் கரங்கள் உதவி மையம் அழைப்பு எண் 9444717100 என்ற எண்ணை அழைக்கலாம். இவ்வாறு சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.