Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிளஸ் 2 படிக்கும் காதலனுடன் சென்ற 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை போலீஸ்காரர் கைது

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவி மற்றும் பிளஸ் 2 மாணவன் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு தெரியாமல் இருவரும் கடந்த 6ம் தேதி அதிகாலை 4 மணியளவில் டூவீலரில் சென்னைக்கு புறப்பட்டனர். பிரம்மதேசம் மன்னார்சாமி கோவில் அருகே வந்தபோது, அங்கு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பிரம்மதேசம் காவல் நிலைய போலீஸ்காரர் இளங்கோ இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்துள்ளார். வீட்டிற்கு தெரியாமல் இருவரும் சென்னைக்கு செல்வதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து பள்ளி மாணவனை வீட்டிற்கு போக சொல்லி மிரட்டிய காவலர், மாணவியை பாதுகாப்பாக காவல் நிலையம் அழைத்து செல்வதாக கூறியுள்ளார். பின்னர் மாணவியை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன் ஆசைக்கு இணங்காவிட்டால் வேறு ஏதாவது வழக்கில் கைது செய்வேன் எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்து மாணவி தப்பித்து மாணவனுடன் சென்னைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து செல்போன் மூலம் பெற்றோரிடம், காவலர் தன்னை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கண்ணீர் மல்க மாணவி தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஏற்கனவே மகளை காணவில்லை என புகார் அளித்த ஆரோவில் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி விசாரணை நடத்தி, காவலர் இளங்கோவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். காவலர் இளங்கோ மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் விழுப்புரம் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.