*வாகனங்கள் அணி வகுத்து போராட்டம்
ஊட்டி : அரசு பஸ் டிரைவரை மப்டியில் இருந்து போலீசார் தாக்கியதாக கூறப்படும் நிலையில், நேற்று ஊட்டி - குன்னூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டியில் இருந்து நேற்று காலை பாலக்காட்டிற்கு அரசு பஸ் புறப்பட்டது. நொண்டிமேட்டில் பஸ் வேகமாக வந்தது. அப்போது எதிரே வந்த பைக் மீது மோதுவதுபோல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பைக் ஓட்டிய நபர் பஸ்சை மறித்தார். அந்த நபர் மப்டியில் வந்த போலீஸ்காரர் அருண் என்று தெரியவருகிறது. மோதுவதுபோல் பஸ் வந்தது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், பஸ் டிரைவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். இதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் பரவியதை அடுத்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அடுத்தடுத்த அரசு பஸ் உள்ளிடட் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டு டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனையடுத்து பொதுமக்கள் அங்கு வந்து பஸ் டிரைவர் மற்றும் போலீஸ்காரர் அருண் ஆகியோரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன்பினர் ஊட்டி- குன்னூர் சாலை சீரானது.