போலீசை சுட்டுக்கொன்று தற்கொலை செய்த வாலிபர் கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட மனசோர்வால் துப்பாக்கி சூடு? விசாரணையில் தந்தை தகவலால் பரபரப்பு
அட்லான்டா: அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லான்டாவில் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமையகம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்துக்குள் நேற்று காலை துப்பாக்கியுடன் நுழைந்த பேட்ரிக் ஜோசப் வைட் என்ற நபர் அங்கிருந்த அறைகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி டேவிட் ரோஸ் துப்பாக்கி சூடு நடத்திய பேட்ரிக் ஜோசப் வைட்-ஐ தடுக்க முயன்றார். அவரையும் பேட்ரிக் ஜோசப் வைட் சுட்டு கொன்றார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பேட்ரிக் ஜோசப் வைட்-ஐ தேடினர். அப்போது ஒரு அறையில் பேட்ரிக் ஜோசப் வைட் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேட்ரிக் ஜோசப் வைட் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி பேட்ரிக் ஜோசப் வைட்டின் தந்தை காவல்துறையினரிடம் கூறுகையில், “என் மகன் பேட்ரிக் ஜோசப் வைட் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு எப்போதும் மனசோர்வுடன் இருந்தான். தற்கொலை எண்ணங்கள் கூட அவனுக்கு வந்தது.
அண்மையில் அவன் வளர்த்து வந்த நாய் இறந்து போனதால் மனவருத்தம் அதிகமாகி விட்டது” என்றார்.
தடுப்பூசிகள் மீதான அதிருப்தி, அவநம்பிக்கை காரணமாக தேசிய சுகாதார அமைப்பின் தலைமையகம் மீது பேட்ரிக் ஜோசப் வைட் துப்பாக்கி சூடு நடத்தினாரா? அல்லது வேறேதும் காரணமாக? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.