38 வயது நபருடன் ஓடியவர் மீட்பு காவல்நிலைய மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி: 2 கால்மூட்டுகளும் உடைந்த நிலையில் தீவிர சிகிச்சை
வீரவநல்லூர்: நெல்லை மாவட்டம் பத்தமடையை சேர்ந்தவர் முருகன் (38). இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கும், 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும், சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்.7ம்தேதி மாணவி வீட்டிலிருந்து திடீரென மாயமானார். பெற்றோர் புகாரின்படி பத்தமடை போலீசார விசாரணைநடத்தி மாணவியை பிப்.9ல் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். போக்சோ வழக்குப்பதிந்து முருகனை கைது செய்தனர்.
பின்னர் ஜாமீனில் வந்த முருகனுடன் மாணவி மீண்டும் கடந்த 14ம்தேதி மாயமானார். மாணவியின் தாய் புகாரின்படி சேரன்மகாதேவி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து திருச்செந்தூரில் இருந்த இருவரையும் கடந்த 15ம் தேதி கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக பத்தமடை காவல் நிலைய முதல் மாடியில் செயல்பட்டு வரும் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது பெற்றோர் எடுத்து கூறியும் மாணவி, முருகனுடன்தான் செல்வதாக அடம் பிடித்துள்ளார். இதனால் அவரை காப்பகத்தில் ஒப்படைக்கப் போவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி திடீரென காவல் நிலைய மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது 2 கால்களிலும் மூட்டுகள் உடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.