திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே கம்பவள்ளிக்கூடு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அந்தப் பகுதியில் இவர் ஒரு சிறிய செருப்புக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அங்குள்ள புதுப்பரியாரம் ஆரம்ப சுகாதார மையத்திற்கு இவர் பைக்கில் சென்றார். பைக்கை வெளியே நிறுத்திவிட்டு மருத்துவமனைக்குள் சென்றார். டாக்டரை பார்த்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.
அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன் புதுப்பரியாரம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். போலீசாரும் விவரங்களை வாங்கி வைத்துக்கொண்டு பைக்கை கண்டுபிடித்து விடலாம் என்று ராதாகிருஷ்ணனுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர். இனிமேல் எங்கே பைக் கிடைக்கப் போகிறது என்று கவலையுடன் அவர் நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அங்குள்ள எஸ்டேட் சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே தன்னுடைய பைக்கில் ஒரு வாலிபர் வருவதை ராதாகிருஷ்ணன் தற்செயலாக கவனித்தார். காவல்நிலையத்தில் புகார் கொடுத்து விட்டுத் திரும்பும் நேரத்தில் காணாமல் போன பைக் கண்ணுக்கு எதிராக வருவதைப் பார்த்ததும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டு, ஒரு கணம் அவர் திக்குமுக்காடிப் போனார்.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட ராதாகிருஷ்ணன், ‘திருடன்... திருடன்...’ என்று உரக்க கத்திய படியே விரட்டிச் சென்று அந்த ஆசாமியை பைக்குடன் மடக்கிப் பிடித்தார். ராதாகிருஷ்ணனின் கூக்குரல் சத்தத்தை கேட்டு அப்பகுதியினரும் அங்கு திரண்டனர். உடனடியாக புதுப்பரியாரம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த ஆசாமியைப் பிடித்து கைது செய்தனர்.