Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணி 3,644 காலியிடங்களுக்கு 2.25 லட்சம் பேர் போட்டி: சென்னையில் 10 மையங்களில் 8 ஆயிரம் பேர் எழுதினர்

சென்னை: காவல்துறையில் காலியாக உள்ள 3,665 இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் 45 மையங்களில் நடந்தது. இந்த தேர்வை பெண்கள் உட்பட 2.25 லட்சம் பேர் எழுதினர். சென்னையில் 10 மையங்களில் மொத்தம் 8 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 2,833 இரண்டாம் நிலை காவலர் பணியிடம், சிறைத்துறையில் 180 இரண்டாம் நிலை காவலர் பணியிடம், தீயணைப்புத்துறையில் 631 பணியிடங்கள் என மொத்தம் 3,644 காலிப்பணிடங்களுக்கு, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போது என்று கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அறிவிப்பு வெளிட்டது.

பின்னர் தமிழகம் முழுவதும் இந்த தேர்வுக்கு பட்டதாரிகள், இன்ஜினியர்கள் என மொத்தம் 2.50 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். தமிழை ஒரு மொழி பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் மட்டுமே இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதன்படி விண்ணப்பங்கள் சரிபார்ப்பதை தொடர்ந்து 2.25 லட்சம் பேருக்கு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கியது. அதனை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் என 38 மாவட்டங்களில் மொத்தம் 45 தேர்வு மையங்களில் நேற்று இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு தொடங்கியது.

இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் செய்துள்ளது. தேர்வு நடக்கும் மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர்களாக அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள், மாநகரங்களில் மாநகர ஆணையர்கள் மற்றும் 4 மண்டல ஐஜிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுத தகுதியானவர்களுக்கு அனுப்பட்ட விண்ணப்பதாரர்கள் காலை 8 மணிக்கு தேர்வு மையம் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிகாலை 6 மணிக்கே விண்ணப்பதாரர்கள் தேர்வு மையங்கள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பின்னர் தேர்வு மையத்திற்குள் சரியாக 8 மணியில் இருந்து 9.30 வரை தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளுடன் வந்த பெண்கள் தங்களது குழந்தைகளை கணவன் மற்றும் உறவினர்களிடம் கொடுத்துவிட்டு தேர்வு மையத்திற்குள் சென்றனர். தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்க தேர்வு நடைபெறும் வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு வளாகத்தில் 2 முதல் 3 நபர்கள் தேர்வுகளை கண்காணித்தனர்.

சென்னையை பொருத்தவரை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி இணை கமிஷனர்கள் மற்றும் துணை கமிஷனர்கள் தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் மூலம் 10 தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. குறிப்பாக மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக வளாகம், ராமாபுரத்தில் எஸ்ஆர்எம் இன்ஜினியரிங் கல்லூரி, அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு வேளாம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி,

வேளச்சேரி குருநானக் கல்லூரி, துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தன்ராஜ் பெய்ட் ஜெயின் கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகம், தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி, கதீட்ரல் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, ஜார்ஜ டவுன் பாரதி மகளிர் கல்லூரி என 10 தேர்வு மையங்களில் 1,772 பெண்கள் உட்பட மொத்தம் 8,090 பேர் கலந்து கொண்டனர்.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் 3,248 பேர் கலந்து கொண்டனர். இது போல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் மொத்தம் 2.25 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொண்டனர். கடும் பாதுகாப்புடன் எழுத்து தேர்வு நடந்தது. தேர்வு மையங்கள் பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் அடிக்கடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தவறுகள் நடைபெறாமல் கண்காணித்தனர்.

மேலும் தேர்வு நடக்கும் பகுதி அருகே போலீசார் தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டனர். காலதாமதமாக வந்த யாரையும் போலீசார் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. காவலர்களுக்கான எழுத்து தேர்வு எளிமையாக இருந்ததாகவும், சில வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக உடல் தகுதி தேர்வு மற்றும் சான்று சரிபார்ப்பு நடைபெறும் என சீருடை பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

* ஜெராக்ஸ் எடுக்க மறந்த பெண்களுக்கு உதவிய போலீஸ்

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் எழுத்து தேர்வுக்கு வந்த 2 பெண்கள் அடையாள அட்டையை ஜெராக்ஸ் எடுக்க மறந்து விட்டனர். தேர்வு மையத்திற்கு செல்லும் போது 2 பெண்களும் திடீரென கையில் வைத்திருந்த ஆவணங்களை பார்த்த போது, அடையாள அட்டை ஜெராக்ஸ் காப்பி இல்லாதது தெரியவந்தது. இதனால் அந்த 2 பெண்களும் அதிர்ச்சியடைந்து தேர்வு எழுத முடியாதோ என வேதனையில் அழுதனர்.

இதைப்பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனே 2 பெண்களையும் தங்களது காவல் வாகனத்தில் ஏற்றி கொண்டு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு அழைத்து சென்று, ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து, மீண்டும் இருவரையும் தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் கொண்டு வந்து விட்டனர். இதனால் தேர்வு எழுத வந்த 2 பெண்கள் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

* பெண்கள் தேர்வு மையத்தில் வாலிபர் வந்ததால் பரபரப்பு

ராமநாதபுரத்தில் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையம் பெண் தேர்வர்களுக்கு ஒதுக்கப்படடது. இந்த தேர்வு மையத்திற்கு ஒரு வாலிபர் தேர்வு எழுத வந்தார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குழப்பமடைந்தனர். ஆனால் தேர்வு எழுத வந்த வாலிபருக்கு பெண்களுக்கான தேர்வு மையத்தில் தேர்வு எழுத ஒதுக்கப்பட்டு அதற்கான நுழைவு சீட்டும் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் நீண்ட விசாரணைக்கு பிறகு போலீசார் அந்த வாலிபரை தேர்வு எழுத அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.