உடந்தையாக இருந்த போலீசார் மூணாறில் ஆன்லைன் டாக்சிக்கு அனுமதி மறுத்து டிரைவர்கள் தகராறு: மும்பை உதவி பேராசிரியை வெளியிட்ட வீடியோ
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள மூணாறுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.இங்குள்ள ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் மீது நீண்ட காலமாகவே புகார் கூறப்பட்டு வருகிறது. அதிக கட்டணம் கேட்பது, சுற்றுலாப் பயணிகளிடம் அத்துமீறி நடப்பது உள்பட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது கூறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மூணாறில் உள்ள டாக்சி டிரைவர்கள் மற்றும் போலீசார் மீது சரமாரி குற்றச்சாட்டுகளுடன் மும்பையைச் சேர்ந்த ஜான்வி என்ற உதவி பேராசிரியை வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.
மூணாறில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் குறித்து அவர் கூறியது: கேரளா மிக அற்புதமான ஒரு பகுதியாகும். இது கடவுளின் தேசம் தான் என்பதை மறுக்க முடியாது. ஆனால் இங்கு வந்த பின்னர் எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் இனி கேரளாவுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. நான் ஆன்லைன் டாக்சியில் கொச்சிக்கும், ஆலப்புழாவுக்கும் சென்ற பின்னர் மூணாறுக்கு வந்தேன். ஆனால் வழியில் எங்களை மறித்த மூணாறு உள்ளூர் டாக்சிக்காரர்கள் ஆன்லைன் டாக்சியை இங்கு அனுமதிக்க முடியாது என்று கூறி தகராறில் ஈடுபட்டனர்.
நான் உடனடியாக அங்கிருந்த போலீசாரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினேன். ஆனால் போலீசார் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. உள்ளூர் டாக்சி ஓட்டுநர்களுக்கு ஆதரவாகவே அவர்கள் நடந்து கொண்டனர். அவர்கள் ஆன்லைன் டாக்சியை விட மூன்று மடங்கு அதிக கட்டணம் கேட்டனர். மேலும் எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை கூட உருவானது. இதனால் வேறு வழி இல்லாமல் அதிக கட்டணம் செலுத்தி உள்ளூர் டாக்சியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இது எனக்கும், என்னுடன் வந்தவர்களுக்கும் மிகுந்த மன வேதனையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. இனி எந்தக் காரணம் கொண்டும் நாங்கள் கேரளாவுக்கு வரமாட்டோம். இவ்வாறு ஜான்வி அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
* டாக்சி டிரைவர்கள் கைது, 2 போலீசார் சஸ்பெண்ட்
மூணாறு சம்பவம் கேரளாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டது என்றும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் முகம்மது ரியாஸ் கூறினார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ஜான்வியிடம் தகராறில் ஈடுபட்ட மூணாறு டாக்சி டிரைவர்களான விநாயகன் மற்றும் விஜயகுமார் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு உதவி சப் இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
 
 
 
   