Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காவல்துறையில் இ-சம்மன் முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்: டிஜிபி, பதிவாளர் ஜெனரல் உறுதி செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: டிஜிபி, பதிவாளர் ஜெனரல் இணைந்து இ-சம்மன் முறை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்தவர் ராமசாமி. மூத்த குடிமகனான இவர் மீது மருமகள் அளித்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கடந்த 2013ல் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் வேடசந்தூர் மாவட்ட முன்சீப் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ராமசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: 2013ல் விசாரணைக்கு எடுக்கப்பட்ட ஒரு வழக்கில் 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் சம்பந்தப்பட்டவர் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2018 வரை நீதிமன்றத்தில் இருந்து எந்தவித சம்மனும் வரவில்லை. 2018ல் வந்த முதல் சம்மனை எஸ்எஸ்ஐ பெற்றுள்ளார். ஆனால், அதன் மீது அவர் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2021ல் இரண்டாவது உத்தரவாகியுள்ளது, கொரோனா காலம் என்பதால் வழங்கப்படவில்லை. 2024ல் வந்த சம்மன் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை. இதைத் தொடர்ந்து தான் மனுதாரருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே, பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்ட காவல் துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளதாக எஸ்பி அறிக்கையளித்துள்ளார். வேடசந்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கடந்த ஏப்ரலில் தான் அங்கு பணியில் சேர்ந்துள்ளார். அதன்பிறகு அவர் வழக்கை வேகப்படுத்தியுள்ளார். இவற்றையெல்லாம் இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. நீதிமன்றத்தில் எந்த முன்னேற்றமும் இன்றி 12 ஆண்டுகளாக இந்த வழக்கு முடங்கியுள்ளது. இதற்கு காவல்துறை மற்றும் நீதிமன்ற குறைபாடுகள் காரணமாகும். ஏன் சம்மன் அனுப்பவில்லை என்றும், மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டும் சரிபார்க்கவில்லை.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்களுக்கான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். அதில் நீதிமன்றங்களிலிருந்து பெறப்படும் அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் பதிய வேண்டும். இந்த பதிவேட்டை 2 மாதத்திற்கு ஒரு முறை இன்ஸ்பெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். இதன் விபரத்தை எஸ்பிக்கு அறிக்கையளிக்க வேண்டும். நீதிமன்ற சம்மன்களை நிறைவேற்றுவது, இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை எஸ்பிக்கும், நீதிமன்றத்திற்கும் தெரிவிப்பதை உறுதி செய்வது இன்ஸ்பெக்டரின் கடமை. இந்த வழக்கை பொறுத்தவரை காவல் துறை நிலையாணை மீறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதைப்போல சம்பந்தப்பட்ட நீதித்துறையினரிடம் இருந்தும் எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு விசாரணையின் போது சரியான நடவடிக்கை எடுப்பதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதில் நீதித்துறை சில பொறுப்புகளைக் கொண்டுள்ளது. இயந்திரத்தனமாக உத்தரவிடுவது மட்டும் போதாது. தேவைப்படும்போது சட்டப்பூர்வ மாற்றுவழிகளை நாட வேண்டும். டிஜிபியின் நடவடிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், அனைத்து காவல்துறையினரும் இ-சம்மன் மொபைல் பயன்பாட்டை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது முறையாக செயல்படுத்தப்பட்டால், இது போன்றவை மீண்டும் நிகழாது. டிஜிபி மற்றும் பதிவாளர் ஜெனரல் மற்றும் பதிவாளர் (ஐடி) ஆகியோர் இணைந்து செயல்பட்டு இ-சம்மன் முறையை உடனடியாகவும், கண்டிப்பாகவும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கை பொருத்தவரை மனுதாரர் தரப்பு வாதத்தை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் முன்வைக்கலாம் என்பதால் இந்த மனு முடிக்கப்படுகிறது. வழக்கின் விசாரணையை 3 மாதத்திற்குள் நீதிமன்றம் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.