பவுஜா சிங் மீது கார் ஏற்றிவிட்டு தப்பியோடிய கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி கைது: பஞ்சாப் போலீஸ் அதிரடி
அமிர்தசரஸ்: மூத்த மாரத்தன் வீரர் பவுஜா சிங் மீது கார் ஏற்றிவிட்டு தப்பியோடிய கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளியை பஞ்சாப் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ‘டர்பன் டொர்னாடோ’ என்று அன்புடன் அழைக்கப்படும் மூத்த தடகள வீரரான பவுஜா சிங் (114), பஞ்சாபில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு அருகே ஜலந்தர்-பதான்கோட் நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அவர் மீது அடையாளம் தெரியாத கார் மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விபத்தை ஏற்படுத்திய டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை அடையாளம் கண்டனர்.
விசாரணையில், அந்தக் கார் கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான அம்ரித்பால் சிங் தில்லான் (30) என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. கடந்த வாரம் இந்தியா வந்திருந்த அவரை, போலீசார் அவரது கிராமத்தில் வைத்து கைது செய்தனர். விசாரணையில், தில்லான் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், காரில் மோதியது புகழ்பெற்ற பவுஜா சிங்தான் என்பது, டிவியில் வெளியான செய்தி மூலம் தான் தனக்குத் தெரியவந்தது என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது அவரை கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.