Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘போலீஸ் அக்கா’ திட்டம் மூலம் 223 அரசு பள்ளியில் விழிப்புணர்வு

*எஸ்பி சுஜாதா தகவல்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் 223 அரசு பள்ளிகளில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து ஈரோடு மாவட்ட எஸ்பி சுஜாதா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களை தடுக்கும் விதமாகவும், பள்ளி மாணவர்களுக்கு போக்சோ வழக்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ‘போலீஸ் அக்கா’ துவங்கி உள்ளோம். இத்திட்டத்தில், மாவட்டத்தில் உள்ள 223 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பணியாற்ற 82 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த போலீசார் அந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்கு உட்பட்ட 3 பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.

குறிப்பாக பாலியல் துன்புறுத்தல், தொந்தரவு தொடர்பாக மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதே வேளையில் மாணவர்களுக்கும் போக்சோ சட்டம், குழந்தை திருமண தடை சட்டம் குறித்து விளக்க உள்ளோம்.

இதுதவிர சமூக வலை தளங்களின் தீமைகள், அதனை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும், சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிகளின் முக்கியத்துவம், மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் மீட்டிங் நடக்கும்போது, ‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் நியமிக்கப்பட்ட போலீசார் பங்கேற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பயன்பாட்டை தவிர்க்க திடீர் சோதனை நடத்துவது, பள்ளிக்கு 100 அடிக்கு முன்னால் போதை பொருட்கள் விற்பனை குறித்த கண்காணிப்பை மேற்கொள்வது போன்ற பணிகளையும் மேற்கொள்ள உள்ளனர். இதுதவிர, அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க உள்ளோம்.

இந்த பெட்டியில் வாரம் ஒருமுறை திறந்து அதில் உள்ள புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார் பெட்டியில், ‘போலீஸ் அக்கா’ திட்ட பொறுப்பாளரான போலீஸ் செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டு, அதிலும் புகார் தர அறிவுறுத்த உள்ளோம்.இவ்வாறு எஸ்பி சுஜாதா கூறினார்.