Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போலீசாரின் நிபந்தனைகளை மீறி தவெகவினர் செயல்பட்டதால் திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள், வியாபாரிகள் அவதி; 15 பேர் மயக்கம்

திருச்சி: போலீசார் விதித்த 23 நிபந்தனைகளை மீறி தவெகவினர் செயல்பட்டதால், திருச்சியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். சாலைகளில் விஜய் ரசிகர்கள் சாகசம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு இடையூறு ஏற்படுத்தினர்.

தவெக தலைவர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும், மதுரையில் 2வது மாநாட்டையும் நடத்தினார். ஆனால், மக்களை இதுவரை அவர் நேரில் சந்திக்கவில்லை. இதனால் மக்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்திக்க விஜய் முடிவு செய்தார். இந்த பிரசாரத்தை திருச்சியில் இருந்து நேற்று தொடங்கினார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று காலை 9.40 மணியளவில் வந்தார். 9.45 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவர், அங்கு தயாராக இருந்த பிரசார நவீன வசதி கொண்ட வாகனத்தில் ஏறி அமர்ந்தார். ஆனால் அங்கு திரண்டிருந்த தொண்டர்கள், வாகனத்தை சூழ்ந்து கொண்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் விமான நிலையத்துக்கு சென்ற பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

காலை 10.35 மணிக்கு விஜய் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், விமான நிலையத்தில் இருந்து மரக்கடை வரை ரசிகர்கள் விஜய்யின் வாகனத்தை செல்ல விடாமல் அட்ராசிட்டி செய்ததால் பிரசார பகுதிக்கு வரவே பல மணி நேரம் ஆனது. திருச்சியின் முக்கிய சாலைகள் விஜய் காண வந்த ரசிகர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்ததால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். குறிப்பாக, திருச்சி-புதுக்கோட்டை சாலை முற்றிலும் முடங்கியது.

விஜய்யின் முதல் பிரசார பயணம் என்பதால் மாநிலம் முழுவதும் இருந்து அந்தந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அழைத்து வந்து இருந்தனர். மேலும், ரசிகர்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். மரக்கடை பகுதி மிகவும் குறுக்கலான இடம் என்பதால் கூட்டம் அதிகமாக கூடியதும் கடும் நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் சாலையை அடைத்துக்கொண்டு கூச்சல் போட்டும், கார்களின் டாப்பில் அமர்ந்து கொண்டும், டூவீலரில் மூன்று, நான்கு பேர் அமர்ந்து கொண்டு கொடியையும், விஜய் பேனரையும் பிடித்துக்கொண்டு சாலையை ஆக்கிரமித்து கோஷமிட்டனர்.

இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். மரக்கடை பகுதியில் கூட்ட நெரிசலால் ஒரு வாலிபர், டீக்கடை மேற்கூரையில் அமர்ந்திருந்த வாலிபர், 4 பெண்கள் உள்பட 11 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் விமான நிலையத்தில் காத்திருந்த ஹரிணி என்ற பெண் மற்றும் ஒரு வாலிபர் மயங்கி விழுந்தனர். தலைமை தபால் நிலையம் அருகே 2 பெண்கள் மயங்கினர். அவர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருச்சி மாநகர காவல் துறையினர் விதித்த 23 நிபந்தனைகளையும் தவெகவினர் மீறியதால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் அவதி அடைந்தனர். போலீசாரிடம் அனுமதி வாங்கும் போது, அனைத்து நிபந்தனைகளையும் முறையாக பின்பற்றுவோம் என கூறினர். ஆனால், விஜய்யின் வாகனத்தை சூழ்ந்து கொண்டு வாகனத்தை நகர விடாமல், வாகனத்தில் தொங்கியபடி சென்றனர். ஆனால், விஜய், தொண்டர்களுக்கு அறிவுரை வழங்காமல் கையசைத்தபடி சென்றார்.

திருச்சி முடங்க தவெக நிர்வாகிகள் காரணம்

திருச்சியில் தவெக தலைவர் விஜய் நேற்று தனது பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரத்துக்காக தவெக தேர்வு செய்த பகுதி மரக்கடை அருகே உள்ள எம்ஜிஆர் சிலை. மரக்கடை என்பது திருச்சியின் இதய பகுதியாகும். அங்கு ஏராளமான வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைகடைகள் உள்ளன. அதோடு மரக்கடை அருகே தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மார்க்கெட் பகுதி உள்ளது. எனவே மரக்டையை தவிர்த்து ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடத்திய ஜி-கார்னர் அல்லது சிறுகனூர் பகுதியில் பிரசாரம் நடத்த காவல்துறை ஆலோசனை வழங்கியது. ஆனால் தவெகவினர் அடம்பிடித்து மரக்கடை தான் வேண்டும் என்று கேட்டு அனுமதி வாங்கியதாக கூறப்படுகிறது.

வீடியோ எடுக்காதே.... தவெகவினர் மிரட்டல்

திருச்சி வந்த விஜய்யை பார்ப்பதற்காக ஏராளமானோர் விமான நிலையத்தில் குவிந்தனர். குறிப்பாக பெண்களும் ஏராளமாக வந்திருந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள் மயக்கமடைந்தனர். அதில் ஒரு பெண்ணிற்கு தலையிலும், மற்றொரு பெண்ணிற்கு காலிலும் காயம் ஏற்பட்டது. விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் ஏதும் நிறுத்தப்படாததால் அங்கிருந்து காயமடைந்த பெண்களை தூக்கிக்கொண்டு வௌியில் வந்தனர். அங்கிருந்து விமான நிலையத்தின் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த பெண்களுக்கு விமான நிலைய ஊழியர்கள் தண்ணீர் கொடுத்து முதலுதவிகள் செய்தனர். விஜய் விமான நிலையம் வந்த உடன் ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு பேரிகார்டுகளை தள்ளிக்கொண்டு ஓடியதால் தான் நெரிசல் ஏற்பட்டு பெண்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சிகளை வீடியோ எடுத்த நிருபர்களை தவெகவினர் வீடியோ எடுக்காதே... எதுக்கு வீடியோ எடுக்கிற... கேமராவை ஆப் பன்னு என்று கூறி மிரட்டல் விடுத்தனர்.

நொந்து போன வியாபாரிகள்

மாநகரில் முக்கியமான வணிக பகுதியான மரக்கடை பகுதியில் விஜய் தனது பிரசாரத்தை நடத்தியதால் அந்த பகுதி வணிகர்கள் வியாபாரம் இன்றி நொந்து போனார்கள். தினசரி தேவைக்காக காய்கறி வாங்க காந்தி மார்க்கெட் வருதற்கு கூட முடியாமல் பொதுமக்களும், சிறு வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், ஹார்டுவேர்ஸ் பொருட்கள், நகை, ஜவுளி, மளிகை, அரிசி என அனைத்து பொருட்களும் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் இந்த பகுதியில் ஏராளமாக உள்ளன. அவற்றிற்கு செல்ல முடியாமல் மக்களும், வியாபாரம் செய்ய முடியாமல் வணிகர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

பொது சொத்துக்களை

சேதப்படுத்திய தவெகவினர்

திருச்சி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்து தாண்டி விஜய்யை பார்க்க சென்றனர். மேலும் மின்கம்பிகளில் ஏறியும் சாகசம் செய்தனர். தொடர்ந்து திருச்சி- புதுக்கோட்டை சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்தனர். தொடர்ந்து மரக்கடை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆஸ்பெட்டாஸ் சீட்டில் ஏறி அமர்ந்து இருந்தனர். அப்போது திடீரென ஆஸ்பெட்டாஸ் சீட்டு உடைந்து நொறுங்கியது. இதே போல் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த தவெகவினர், பல்வேறு இடங்களில் பொதுசொத்துக்களை சேதப்படுத்தினர். தொடர்ந்து மாநகரில் உள்ள கண்காணிக்கும் கேமரா மூலம் பொது சொத்துக்களை சேதப்படுத்திய நபர்கள் குறித்து மாநகர போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

சம்பளம் போச்சு...விஜய் பண்றது தப்பு... கூலித் தொழிலாளிகள் கண்ணீர்

விஜய் பிரசாரத்தில் சாதாரண கூலித்தொழிலாளர்களின் பிழைப்பிலும் மண் விழுந்துள்ளது. திருச்சி போஸ்ட் ஆபீஸ், டிவிஎஸ் டோல்கேட் போன்ற முக்கியமான பகுதிகளில் இருந்து பாலக்கரை, மரக்கடை, காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் வேறு சாலைகளில் திருப்பிவிடப்பட்டதால், பூ, காய்கறி வாங்கி விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், கடைகளில் வேலை செய்யும் தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையான அவதியடைந்தனர். போக்குவரத்து மாற்றத்தால் வேலைக்கு செல்ல முடியாமல் ஒரு நாள் கூலி பறிபோய் விட்டதாக தொழிலாளர்கள் வேதனையோடு கூறியதை பார்க்க முடிந்தது. சாப்பாடு கட்டிய பைகளோடு சாலையோரங்களில் வாடிய முகங்களோடு நின்றிருந்த தொழிலாளர்களை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

அரியமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் முருகன் கூறியதாவது: பஸ்லாம் போகாதுன்னு சொல்லி போஸ்ட் ஆபீஸ்கிட்டயே இறக்கிவிட்டுடாங்க. இங்க இருந்து மார்க்கெட் 3 கிலோமீட்டர். அங்கிருந்து அரியமங்களம் 3 கிலோமீட்டர். மொத்தம் ஆறு கிலோமீட்டர் தூரம் இருக்கு. எனக்கு 60 வயது. 6 கிலோமீட்டர் என்னால் நடந்து போக முடியுமா?.. ஒரு நாளைக்கு எனக்கு 800 ரூபாய் சம்பளம். இன்னக்கி அந்த சம்பளம் போச்சு. வீட்ல சம்பளம் எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்ல முடியும். என்னோட 16 பேர் அந்த கம்பெனியில வேலை செய்யிறோம். அவ்வளவு பேரும் இங்க ரோட்ல தான் நிற்கிறோம். சாப்பாட்டு பையோடு வந்துட்டு வேலைக்கும் செல்ல முடியாமல், வீட்டிற்கும் செல்ல முடியாமல் இங்கிருக்கும் மரத்தடியில் தான் படுத்திருக்க வேண்டும். விஜய் பண்றது ரொம்ப தப்பு.இவ்வாறு அவர் கூறினார்.

மணப்பாறையை சேர்ந்த பூ வியாபாரி வெண்ணிலா கூறுகையில்,‘‘ மணப்பாறையில் இருந்து பஸ்சில் திருச்சிக்கு வந்து, பூ எடுப்பதற்காக மார்க்கெட்டுக்கு ரெகுலராக வந்து செல்வேன். இன்றைக்கு (நேற்று) திருச்சி வந்த பிறகு தான் விஜய், திருச்சி வந்திருப்பது தெரியவந்தது. நிபந்தனைகளை மீறி, தவெகவினர் சென்றதால் மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடத்தணும். போஸ்ட் ஆபீஸ் பகுதியில் என்னை இறக்கி விட்டனர். அங்கிருந்து நடந்து 3 கி.மீ தூரம் சென்று பூ எடுக்க வேண்டிய நிலை உள்ளது. வயதானவர்கள் எப்படி செல்ல முடியும். மக்கள் நிறைய பேர் புலம்பி வருகிறார்கள்,’’என்றார். தொடர்ந்து, திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த பூ வியாபாரியான மூதாட்டி ஒருவர் கூறுகையில்,‘‘ போஸ்ட் ஆபீஸ் பகுதியில் என்னை இறக்கி விட்டனர். வயதான காலத்தில் என்னால் எப்படி 3 கி.மீ தூரம் நடந்து செல்ல முடியும். இனி மேல் எப்ப நான் பூ வாங்கி, வியாபாரம் செய்ய முடியும். இன்னைக்கு என்னுடை பொழப்பு போச்சு,’’என்றார்.

கூட்டத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்

திருச்சி விமான நிலைய பகுதிகளில் விஜயை காண கூடிய கூட்டத்தில் ஆம்புலன்ஸ் சிக்கி கொண்டது. அதை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதேபோல், மரக்கடை பகுதியில் நேற்று விஜய் பேசத்தொடங்கினார். அப்போது அவ்வழியாக திடீரென ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது.உடனடியாக தவகெ தொண்டர்கள் வழிவிட்டதால் ஆம்புலன்ஸ் அங்கிருந்து நகர்ந்து சென்றது. ஆம்புலன்ஸ் அந்த பகுதியில் இருந்து செல்வதற்காக தொண்டர்கள் விரைவாக வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

‘இறந்த அப்பாவ கூட பார்க்க போக முடியல’ தவித்த விமான பயணி

விஜய்யை பார்ப்பதற்காக ஏர்போர்ட்டிலும் ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் விமான நிலையத்திற்குள் இருந்து வௌியில் வரமுடியாமல் மாட்டிக்கொண்டு தவித்த பயணிகள் ஒரு புறம் என்றால் விமானத்தை பிடிப்பதற்காக உள்ளே செல்ல முடியாமல் பரிதவிப்போடு நின்ற பயணிகளின் நிலை பரிதாபமாக இருந்தது. சர்வதேச விமான நிலையமான திருச்சிக்கு பல்வேறு வௌிநாடுகளில் இருந்தும், பல்வேறு வௌிநாடுகளுக்கும் செல்லும் விமான பயணிகள் விஜய் வருகையால் கடும் விரக்தி அடைந்தனர். இதில் கொடுமை என்னவென்றால் சவுதியில் இருந்து தனது தந்தையின் இறப்பிற்காக புதுக்கோட்டை செல்வதற்கு வந்த பயணி ஒருவர், விமானநிலையத்தை விட்டே வௌியில் வர முடியாமல் தவிப்போடும் கண்ணீரோடும் காத்துக்கிடந்தார்.

சவுதியில் இருந்து திருச்சி வந்த பயணி ஒருவர் கூறுகையில், ‘‘என்னுடன் சவுதியில் இருந்து அவரோட அப்பா இறப்புக்காக ஒருவர் வந்தார். ஒரு எமெர்ஜென்சியா என்னோட வந்தார் சவுதியில் இருந்து. அவர் இன்னமும் இங்க நிற்கிறார். பாவம் அவர் அப்பாவோட இறப்புக்கு வந்தவர். ஒரு இண்டர்நேஷனல் ஏர்போர்ட்ல டிராஃபிக்க பிராப்பரா விடாம, ஒரு தனிப்பட்ட நபருக்காக இப்படி செய்யக்கூடாது என்றார்.

ரசிகர்களால் மின்தடை

மரக்கடை பகுதியில் எப்படியாவது விஜய்யை பார்த்துவிட வேண்டும் என்பதற்காக ஆபத்தை உணராமல் ரசிகர்களும், தொண்டர்களும் அங்குள்ள கட்டிடங்களின் மேற்கூரைகள், மரங்கள், பேனர்கள் மற்றும் மின்கம்பங்களிலும் ஏறி நின்றனர். போலீசார் எச்சரித்தும் அவர்கள் மின்கம்பங்களில் இருந்து இறங்கவில்லை. இதனால் அசம்பாவிதத்தை தவிர்க்க மரக்கடை பகுதியில் காலை 10 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வீடுகளுக்குள் இருந்த பொதுமக்களும் கடும் சிரமங்களை சந்தித்தனர்.

கடைகளை உடைத்த ரசிகர்கள்

விஜய் பரப்புரை செய்த மரக்கடை பகுதியில் திரண்ட ரசிகர்கள் அங்கிருந்த சாலையோர கடைகளில் இருந்த பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். இது குறித்து ரவிச்சந்திரன் என்ற கடைக்காரர் கூறியதாவது: நான் நான்கு தலைமுறையாக இங்கு கடை வைத்துள்ளேன். இன்னக்கி(நேற்று) விஜய் மீட்டிங் போட்டதால் இங்கிருக்கிற இரண்டு கடைகளில் இருக்கும் கடைகளில் உள்ள பொருட்களை உடைச்சிட்டாங்க. என்கடை முழுவதும் சேதமடைந்துள்ளது. டேபிள், சேர், போட்டோ உள்ளிட்ட பொருட்களை உடைச்சிட்டாங்க... பக்கத்து கடை பாதி சேமடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.