காவலர் நினைவு தினம்; போலீசாரின் உறுதியான அர்ப்பணிப்பு நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்
புதுடெல்லி: ‘போலீசாரின் உறுதியான அர்ப்பணிப்பு நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்கிறது’ என காவலர் நினைவு தினத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1959ம் ஆண்டு இதே நாளில் லடாக்கின் ஹாட் ஸ்பிரிங் பகுதியில் சீன துருப்புகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட 10 மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களின் நினைவாக நாட்டின் அனைத்து காவல் படைகளிலும் இந்த நாள் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்நாளையொட்டி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘காவல்துறையினரின் முன்மாதிரியான துணிச்சல், உயர்ந்த தியாகத்திற்கு மரியாதை செலுத்துகிறேன். நெருக்கடி, மனிதாபிமான தேவைகள் ஏற்படும் சமயங்களில் உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் சேவை செய்யத் தயாராக இருப்பது, அவர்களின் துணிச்சல், இரக்கம் மற்றும் தளராத கடமை உணர்வை எடுத்துக்காட்டுகிறது’’ என்றார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘காவலர் நினைவு தினத்தன்று, நமது காவல்துறையினரின் துணிச்சலுக்கு வணக்கம் செலுத்துகிறோம். அவர்களின் உயரிய தியாகத்தை நினைவுகூருகிறோம். அவர்களின் உறுதியான அர்ப்பணிப்பு நமது நாட்டையும் மக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. நெருக்கடியான காலங்களிலும், தேவைப்படும் தருணங்களிலும் அவர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது’’ என்றார்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது எக்ஸ் பதிவில், ‘‘காவல்துறையினர் குற்றங்களையும், உள்நாட்டு பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களையும் முறியடித்து, சிறந்த துணிச்சல், அர்ப்பணிப்புடன் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதன் மூலம் பெருமை சேர்த்துள்ளனர்’’ என்றார்.
நக்சல் ஒழிப்பின் விளிம்பில் இந்தியா
பிரதமர் மோடி தீபாவளி நாளில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் ஆயுதப்படை வீரர்களிடம் ஆற்றிய உரையில், ‘‘நமது பாதுகாப்பு படையினரின் வீரம், துணிச்சலால் நாடு மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டி உள்ளது. நக்சல்-மாவோயிஸ்ட் தீவிரவாதத்தில் இருந்து நாடு முழுமையாக விடுபடுவதில் விளிம்பில் உள்ளது. கடந்த 2014க்கு முன்பு நாடு முழுவதும் 125 மாவட்டங்கள் மாவோயிஸ்ட் பிடியில் இருந்த நிலையில், தற்போது 11 மாவட்டங்களாக குறைந்துள்ளது. இதிலும் 3 மாவட்டத்தில் மட்டுமே நக்சல்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. 100க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் நக்சல் பிடியிலிருந்து விடுபட்டுள்ளன’’ என்றார்.