காரைக்குடி : காரைக்குடி அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசியை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.புதுக்கோட்டையில் இருந்து சிவகங்கைக்கு ரேஷன் அரிசி கடத்தி வருவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மினி சரக்கு வாகனம் போலீசாரை பார்த்ததும் நிற்காமல் வேகமாக கடந்து சென்றது.
உடனடியாக போலீசார் மினி சரக்கு வாகனத்தை விரட்டி வந்தனர்.
போலீசார் 20 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்ற நிலையில், காரைக்குடி அருகே கரிவியப்பட்டி என்ற இடத்தில் மினி சரக்கு வாகனத்தை பள்ளத்தில் கவிழ்த்து விட்டு டிரைவர் தப்பிவிட்டார். போலீசார் வாகனத்தில் சோதனை நடத்தினர்.
அதில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை கைப்பற்றிய போலீசார், அதனை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.