திருமங்கலம் : திருமங்கலம் அடுத்த திரளியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (40). ஆட்டோ டிரைவர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இரவு வீட்டின் முன்பு தூங்கி கொண்டிருந்த இவரை, ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பாண்டியராஜன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு காரணமன கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுத்து விரைவாக கைது செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு திரளி கிராமத்தில் பாண்டியராஜன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்று காலை முதல் திருமங்கலம் தாலூகா போலீஸ் ஸ்டேஷனை அவர்கள் முற்றுகையிட்டனர். ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி மதியம் வரை உறவினர்களின் போராட்டம் நீடித்தது.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுத்தனர். இந்நிலையில், மதியம் 2.30 மணியளவில் அவர்களே அங்கிருந்து கலைந்து சென்றனர். பாண்டியராஜனை வெட்டி அவர் இறப்புக்கு காரணமானவர்கள் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.