வேலைப்பளுவை குறைக்க விஷ ஊசி போட்டு 10 நோயாளிகளை கொன்ற ஆண் நர்ஸ்: ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி
பெர்லின்: தனது வேலைப்பளுவைக் குறைப்பதற்காக 10 நோயாளிகளைக் கொன்ற ஆண் செவிலியருக்கு ஜெர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஜெர்மனியின் வுயர்செலன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், வலி நிவாரணப் பிரிவில் பணியாற்றி வந்த ஆண் செவிலியர் ஒருவர், 10 நோயாளிகளைக் கொலை செய்ததாகவும், 27 பேரைக் கொல்ல முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆக்கன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர் கடந்த 2023 டிசம்பர் முதல் 2024 மே வரையிலான காலகட்டத்தில், இரவுப் பணியின்போது தனது வேலைப்பளுவைக் குறைப்பதற்காக, அதிக கவனிப்பு தேவைப்பட்ட முதிய நோயாளிகளுக்கு மார்பின் மற்றும் சக்திவாய்ந்த மயக்க மருந்துகளை அதிக அளவில் ஊசி மூலம் செலுத்தி அவர்களைக் கொலை செய்துள்ளார்.
விசாரணையின்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர், ‘நோயாளிகளின் மீது எரிச்சலையும், சிறிதும் அனுதாபமற்ற தன்மையையும் வெளிப்படுத்திய இந்த செவிலியர், வாழ்வின் மற்றும் மரணத்தின் அதிபதியாகத் தன்னை நினைத்துக்கொண்டு செயல்பட்டுள்ளார்’ என்று கடுமையாக வாதிட்டார். குற்றத்தின் கொடூரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், புதைக்கப்பட்ட உடல்களைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

