இல்லாத குறளில் ஆளுநர் மாளிகையில் விருது.. எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள் என கவிஞர் வைரமுத்து பதிவு
சென்னை : மருத்துவ தினத்தையொட்டி, கிண்டிஆளுநர் மாளிகையில் மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா கடந்த 13ம்தேதி நடந்தது. தமிழகத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் 50 மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டு ஆளுநர்ரவி நினைவு பரிசு வழங்கினார். இந்த கேடயத்தில் திருக்குறள் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. அந்த திருக்குறளின் வரிசை எண் 944 என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் திருக்குறளில் அப்படி ஒரு குறளே கிடையாது என்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே ஆளுநர் அளித்த விருதில் போலி திருக்குறள் இடம்பெற்றதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பக்கத்தில்,
"ஜூலை 13இல்
‘வள்ளுவர் மறை
வைரமுத்து உரை’ நூலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெளியிட்ட அதே நாளில்
ஆளுநர் மாளிகையில்
ஒரு விழா
நடந்ததாய்க் கேள்விப்பட்டேன்
மருத்துவர்களுக்கு
வழங்கப்பட்ட
நினைவுப் பரிசில்
944ஆம் திருக்குறள் என்று
அச்சடிக்கப்பட்ட வாசகத்தில்
இல்லாத குறளை
யாரோ எழுதியிருக்கிறார்கள்
அப்படி ஒரு குறளே இல்லை;
எண்ணும் தவறு
யாரோ ஒரு
கற்பனைத் திருவள்ளுவர்
விற்பனைக் குறளை
எழுதியிருக்கிறார்
இது எங்ஙனம் நிகழ்ந்தது?
ராஜ்பவனில்
ஒரு திருவள்ளுவர்
தங்கியுள்ளார் போலும்
அந்தப்
போலித் திருவள்ளுவருக்கு
வேண்டுமானால்
காவியடித்துக்கொள்ளுங்கள்
எங்கள்
திருவள்ளுவரை விட்டுவிடுங்கள்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.