‘‘தொகுதிகள் கிடைத்தாலும்கூட வெற்றிக்கு முட்டுக்கட்டை போட சொந்தக் கட்சியிலேயே அதிருப்தி கோஷ்டிகள் தயாராக இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் தற்போது ஒன்று இலை கட்சியிடமும், ஒன்று மலராத கட்சி வசமும் இருக்கு.. தமிழகத்தில் மலராத கட்சி தொண்டர்கள் அதிகம் உள்ள ஒரு சில பகுதிகளில் இந்த மாவட்டம் முதலிடம். ஆனால், தற்போது இந்த மாவட்டத்தில் 4 தொகுதிகளை குறிவைத்து இலைகட்சி இப்போதே திட்டமிட்டு அழுத்தம் தர தொடங்கி இருக்காம்..
அதற்கு ஏற்ப மலராத கட்சியில் எப்போதும் இல்லாத அளவு கோஷ்டி பூசல், குழி பறிப்பு என உள்ளடி வேலைகள் நடந்து வருவதால், தொகுதிகள் கைவிட்டு போய்விடுமோ என்ற அச்சமும் மலராத கட்சி தொண்டர்களிடம் ஏற்பட்டு இருக்காம்.. ஒரு வேளை ரெண்டு தொகுதிகளையும் மலராத கட்சி போராடி பெற்றாலும், இரு தொகுதிகளிலும் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட சொந்த கட்சியிலேயே அதிருப்தி கோஷ்டிகள் தயாராக இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘போயஸ் கார்டன் புது வீட்டில் நடந்த ஆலோசனையின்போது புது புது தகவலை சொன்னாங்களாமே சின்ன மம்மி..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மம்மி மறைவுக்கு பிறகு இரவோடு இரவாக சிஎம் பதவியை, கண்ணீர் வழிய வழிய ஏற்றுக்கொண்டவர்தான் தேனிக்காரர்.. ஆனால் சும்மா இருந்த சின்ன மம்மியிடம், சிஎம் பதவிக்கான ஆசையை தூண்டி விட்டவர் தற்போதைய இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர்தானாம்.. முன்பெல்லாம் இவரை சின்ன மம்மி பெயரை சொல்லிதான் அழைப்பாராம்.. அவ்வளவு நெருக்கமாக இருந்தாராம்..
ஆனால் தேனிக்காரரிடம் இருந்து பதவியை பறிப்பதற்குள் போதும்போதுமென்றாகி விட்டதாம்.. கதறல் கண்ணீருடன் பதவியை ராஜினாமா செய்ததுடன், தர்மயுத்தம் வரை சென்றது அந்த கதை.. ஆனால் சின்ன மம்மி நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்று என்பது போல, யாரும் எதிர்பாராத வகையில் சேலத்துக்காரர் சிஎம் ஆகிட்டாராம்.. இதன் தொடர்ச்சியாக சின்ன மம்மி இலைக்கட்சியில் சேரமுடியாத நிலையும் ஏற்பட்டுப்போச்சாம்..
இந்நிலையில் தான், சின்ன மம்மியின் பிறந்த நாள் வந்துச்சாம்.. போயஸ்கார்டன் புது வீட்டில் அவரது ஆதரவாளர்களுடன் சின்ன மம்மி ஆலோசனையில் ஈடுபட்டிருக்காங்க.. அப்போது, புது புது தகவலை தெரிவிச்சாங்களாம் சின்னமம்மி.. கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் என்னுடன் பேசிக்கிட்டுதான் இருக்காங்க.. ஆனால், சேலத்துக்காரர் மட்டும் முரண்டு பிடிக்கிறாரு.. அவரை விட்டுட்டு எல்லோரும் சேர்ந்திடலாமுன்னு சொல்றாங்க.. ஆனால், நான்தான் ஒருவரைகூட விட்டுவிடக் கூடாது, அவரையும் சேர்த்தே அழைச்சிக்கிட்டு போவோமுன்னு சொல்லியிருக்கேன்..
அதனால யாரும் கவலைப்படாதீங்கன்னு ஆறுதலான வார்த்தையை சொன்னாங்களாம்.. ரொம்ப நாளாகவே இதைத்தான் சொல்றீங்க, ஆனா அனாதையா நிற்றோமேன்னு முணுமுணுத்தாங்களாம் அடிப்பொடிகள்.. அதே நேரத்துல அந்த சேலத்துக்காரரை நம்பிடாதீங்கம்மா, தனக்கு எந்த பதவியும் கிடைக்கலன்னு தெரிஞ்சா, எந்த எல்லைக்கும் அவர் போவாருன்னு சொல்லியிருக்காங்க.. இதைக்கேட்ட சின்ன மம்மி, அது எனக்கு தெரியுமுன்னும் சொன்னதோடு, மிகவும் எச்சரிக்கையாகத்தான் இருக்கேன்னும் சொன்னாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பலாப்பழக்காரர் ஆதரவாளர்களை தூக்க ஹனிபீ மாவட்டத்திற்கு கூடுதல் ஆபர் கொடுத்திருக்கிறாராமே சேலத்துக்காரர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஹனிபீ மாவட்டத்தில் பலாப்பழக்காரரின் ஆதரவாளர்களுக்கு ஏகத்திற்கும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாம்.. இவரது சொந்த ஊரான பிக்பாண்ட் நகரம் அமைந்துள்ள ஹனிபீ மாவட்டத்தைச் சேர்ந்த பலாப்பழக்காரரின் ஆதரவாளர்களை வளைத்து போட இலைக்கட்சி தரப்பு ரொம்பவே ஆர்வம் காட்டி வருதாம்..
மலராத கட்சி கூட்டணியில் இருந்து விலகுவதாக பலாப்பழக்காரர் அறிவிப்பார் என்பதை சேலத்துக்காரர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம்.. இந்த முடிவு தனக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என நினைத்த சேலத்துக்காரர், முதலில் பலாப்பழக்காரரின் சொந்த மாவட்டத்திலுள்ள அவரது ஆதரவாளர்களை, நம் பக்கம் இழுக்க வேண்டும். அதன்பிறகு மற்ற மாவட்டங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறாராம்..
இருவருக்கும் ஏற்கனவே பிளவு ஏற்பட்டபோது செய்த வேலையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அவர்களது தேவையை சரி செய்து தயாராக இருப்போம் எனக் கூறியுள்ளாராம்.. இதற்கு கூடுதல் ஆபரை ஹனிபீ மாவட்டத்திற்காக கொடுத்துள்ளாராம்.. ஆட்களை இழுக்க ஒரு டீமே இறங்கி வேலை செய்து வருதாம்.. இந்த டீலில் சிலர் கைகோர்க்கலாம் என எதிர்பார்த்தாலும், சிலரோ ஆனது ஆச்சு..
கடைசி வரை இப்படியே இருந்துட்டு போறேன் என வெளிப்படையாக கூறியுள்ளனராம்.. இந்த தகவலும் சேலத்துக்காரருக்கு சொல்லப்பட, அவரோ கடைசி வரை விடாதீர்கள்.. எப்படியாவது தூக்கிவிட வேண்டுமென அன்புக்கட்டளை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் பறக்கிறது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஓட்டு லிஸ்ட் குளறுபடியால் உஷாரான கட்சிகள் புதிய பட்டியலை ஒப்பிட்டு பார்க்க போறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாடு முழுக்க ஓட்டு லிஸ்ட்ல குளறுபடி நடந்திருக்குனு ஆதாரங்களுடன் கை தரப்பு புகார்களை பட்டியலிட, ஆணையம் அளித்த பதில்களோ வாக்காளர்களுக்கும் திருப்தி அளிக்கவில்லையாம்.. இதனால் அடுத்தடுத்த சிறப்பு முகாம்களை ஆவலோடு எதிர்பார்த்து இருக்காங்களாம்.. தங்களது பகுதி முகவரிகளில் யார், யார் புதிதாக வந்திருக்கிறார்கள், ஏதேனும் திரைமறைவு தில்லாலங்கடி வேலைகள் நடந்திருக்கா என்பதை சரிபார்க்க சில கட்சிகள் பழைய பட்டியல்களை தயாராக்கி வியூகம் வகுத்துள்ளார்களாம்..
வோட்டர்ஸ் பெயர் நீக்கம், சேர்த்தல் பணிகள் முடிந்த பிறகும் புதிய பட்டியலை ஒப்பிட்டு பார்க்க முடிவெடுத்து இருக்காங்களாம்.. தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை யூனியனிலும் இதன் தாக்கம் பிரதிபதிலித்ததாம்.. குறிப்பாக வட மாநிலத்தவர், சிறுபான்மையினர் அதிகமுள்ள தொகுதிகளை களஆய்வு செய்ய குழுக்கள் தயாராக உள்ளார்களாம்..
அதிலும் கடந்த முறை மலராத கட்சி அதிக வாக்குகளை பெற்ற இடங்களில் சிறப்பு கவனம் செலுத்த ரகசிய உத்தரவு பறந்திருக்கிறதாம்.. நம்ம ஊரிலும் வாக்கு திருடன்... உஷாரய்யா உஷாரு... என விழிப்புணர்வை வாக்காளர்களிடம் கட்சிகள் தீவிரமாக ஏற்படுத்தி வரும் நிலையில், இதுதொடர்பாக சில கட்சிகளின் கடுமையான விமர்சனங்களும் சமூக வலைதளத்தில் பரவுகிறதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.