போயஸ் கார்டனில் இருந்த ஆவணங்களை கிழித்து விட்டோம் கொடநாடு பங்களாவுக்குள் நுழைந்து கோப்புகளை எடுக்கவே கொலை: டிடிவி.தினகரன் பகீர் பேட்டி
சென்னை: போயஸ் கார்டனில் இருந்த ஆவணங்களை நாங்கள் கிழித்து விட்டோம். கொடநாடு பங்களாவுக்குள் நுழைந்து கோப்புகளை எடுக்கவே கொலை நடந்தது என்று டிடிவி.தினகரன் தெரிவித்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த அமமுக நிர்வாகிகளுடன் அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பல கட்சிகள் கூட்டணிக்காக எங்களை அணுகினார்கள். பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.
பழனிசாமியை வீழ்த்த திமுக தான் சரியான இடமாக இருக்கும் என அங்கு அதிமுகவில் இருந்து பலர் சென்றுள்ளார்கள். அமமுக தனியாக பழனிசாமியை தனியாக வீழ்த்தும் சக்தியுடன் இல்லை. வளர்ந்து வருகிறோம். எங்களை விட திமுக , எடப்பாடி திமுக பெரிய கட்சி என்பது உண்மை. எடப்பாடி எனும் துரோக சக்தி வரும் தேர்தலில் நிச்சயமாக வீழ்த்தப்படுவார். பழனிசாமி எங்களுக்கு இழைத்த துரோகத்துக்காக அவரை வீழ்த்த செயல்படுகிறோம்.
அவரை வீழ்த்தியபின் எம்ஜிஆர் விதித்த சட்டத்திட்டத்தின்படி அதிமுகவை மீட்டெடுப்போம். அமமுக தொடங்கப்பட்டதே எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த தான். கொடநாடில் வாட்ச் மேனை கட்டிப்போட்டு கொடநாடு பங்களாவுக்குள் முக்கிய கோப்புகளை தேட தான் சென்றார்கள். அது யார்? ஜெயலலிதா இருந்த போது அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் குறித்து ஜெயலலிதா கேட்ட ரிப்போர்ட்களை உளவுத்துறை கொடுத்த தகவல்கள் போயஸ் கார்டனிலேயே இருந்தது. அவைகளை படித்துபார்த்து நானும் மருத்துவர் வெங்கடேஷூம் கிழித்து போட்டோம்.
அதில் பல அமைச்சர்களின் வண்டவாளங்கள் இருந்தது. அதை போல கொடநாட்டில் இருக்கிறது என யாரோ பொய் தகவல் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியை யாரோ பயமுறுத்தி இருக்கிறார்கள். அதனால் நானும் சசிகலாவும் இல்லாத நேரத்தில் கொடநாடு பங்களாவுக்குள் நுழைந்தார்கள். அதில் எத்தனை பேர் இறந்தார்கள். இதனால் பயன் அடைந்தது யார்? யார் ஆட்சியில் நடந்தது. எடப்பாடி பழனிசாமி குறித்த தகவல்களை வெளியில் விட்டுவிடுவேன் என பயந்து தான் கொடநாடு பங்களாவுக்குள் சென்றார்கள். ஒரு போதும் நான் பிளாக்மெயில் அரசியல் செய்ய மாட்டேன்.
எல்லாருடைய லீலைகள் எல்லாம் படித்தேன். அப்போது ஜெயலலிதா பச்சை கவர் என்று கூறுவார்கள். அது எல்லாம் இருந்தது நாங்கள் படித்து சிரித்து எரித்துவிட்டோம். பாவம் அது எல்லாம் தெரியாமல் பழனிசாமி அங்கு சென்று தேடி உள்ளார். அதற்கு காரணம் நான் எதையாவது வெளியில் விடுவேன் என்று தான். என்றுமே பழனிசாமிக்கு நான் சிம்மசொப்பணம் தான். துரோகத்தை வீழ்ந்தாமல் நான் ஓய மாட்டேன். நான் வீழ்த்தும் முன் அவரே வீழ்ந்து விடுவார் போல. அவரே கொல்லி கட்டையை வைத்து தலையை சொரிந்து வருகிறார். அவர் குடும்ப அரசியல் தான் நடத்தி வருகிறார் அது உண்மை தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
* எடப்பாடி அணிக்கு 3வது இடம்தான்
‘2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறாது என பாஜ பொறுப்பாளர் கிஷன் ரெட்டியிடம் எழுத்து பூர்வமாகவே கொடுத்தேன். கடந்த 5 ஆண்டுகளில் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் தவறாக உள்ளது. அவருக்கு யாரை பார்த்தாலும் பயம். நான் எடப்பாடி பழனிசாமியுடன் சேருவதற்கு வாய்ப்பே இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைவராக இருப்பதற்கு தகுதியே இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி விஜய் அரசியல் பிரவேசத்துக்கு பிறகு மூன்றாவது இடத்துக்கு தான் செல்லும். 2026 தேர்தலில் திமுக கூட்டணிக்கும் தமிழக வெற்றி கழக கூட்டணிக்கும் தான் போட்டியே‘ என்று டிடிவி.தினகரன் கூறினார்.
