சென்னை: போக்சோ வழக்குகள் தொடர்பாக போலீசாருக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு போக்சோ வழக்கு சம்பந்தமான பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே கடந்த 15ம் தேதி நடந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக நேற்று காலை 10 மணி முதல் 5 மணி வரை எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகம், இரண்டாம் தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடத்தப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பை சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல இணை ஆணையர் பண்டிட் கங்காதர் கலந்து கொண்டார். இப்பயிற்சி வகுப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் வனிதா மேற்பார்வையில் நடந்தது. பயிற்சி வகுப்புகளில் அனைத்து மகளிர் காவல் நிலைய மற்றும் மத்திய குற்றப்பிரிவில் பணிபுரியும் 18 காவல் ஆய்வாளர்களும், 8 உதவி ஆய்வாளர்களும், 19 காவலர்கள் என மொத்தம் 45 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். மேலும் பயிற்சி வகுப்புகள் வரும் 29ம் ேததி மற்றும் டிசம்பர் 6ம் தேதி ஆகிய தேதிகளில் நடக்கிறது.


