*இடித்து அகற்ற வலியுறுத்தல்
போச்சம்பள்ளி : ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மஞ்சமேடு தென்பெண்ணையாற்று தரைப்பாலத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் இருந்து தர்மபுரி செல்லும் பிரதான சாலையில், மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றின் கரையோரம், பிரசித்தி பெற்ற மாதேஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காரிமங்கலம், அரூர், போச்சம்பள்ளி, செங்கம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
விழா காலங்கள் மற்றும் சபரிமலை சீசன், மேல்மருவத்தூர் சீசன்களில் தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீராடி விட்டு செல்கிறார்கள். குறிப்பாக ஆடி 18 தினத்தன்று 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றின் மீது, பழமையான ஆற்றுப்பாலம் செல்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம், சிதிலமடைந்து காணப்படுகிறது.
தென்பெண்ணை ஆறு முழுவதும் பெரிய அளவிலான கற்கள் காணப்படுவதால், குளிக்க வரும் பக்தர்கள் கற்கள் மீது விழுந்து உயிரிழக்கும் சம்பவம் வாடிக்கையாக உள்ளது. மேலும், சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனை சுத்தப்படுத்தி, அபாயகரமாக உள்ள கற்களை அப்புறப்படுத்தினால், பக்தர்கள் நீராட வசதியாக இருக்கும். இதற்கு ஏதுவாக இங்குள்ள தரைப்பாலத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மனு அளித்து வருகிறார்கள்.
ஆனால், இன்று வரை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதுகுறித்து அரசம்பட்டி பன்னீர்செல்வம் என்பவர் கூறுகையில், ‘மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில், தண்ணீர் பெருக்கெடுத்து வரும் காலங்களில், அவ்வழியாக செல்லும் பஸ்கள் ஆற்றை கடக்க முடியாமல் நிறுத்தப்பட்டு வந்தன. இதனால் தென்பெண்ணை ஆற்றின் மீது தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் சிதிலமடைந்து ஆறு முழுவதும் கருங்கற்கள் சிதறி கிடக்கிறது.
இதனால் ஆற்றில் குளிக்க வருபவர்கள் பலர் கல்லில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் தரைப்பாலத்தை முழுவதுமாக அகற்றி, புனித நீராட வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும்,’ என்றார்.