சென்னை: பிஎம் யாசஸ்வி திட்டத்தின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இயக்குநரகம் சார்பில் மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
பிஎம் யாசஸ்வி திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11ம் வகுப்புகளில் படிக்கும் ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. நடப்பாண்டு புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தகுதியான மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையவழியில் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி அளவில் விண்ணப்பங்களை சரிபார்க்க டிசம்பர் 31ம் தேதி கடைசி நாளாகும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சமாக இருக்கவேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


