Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சுய தொழில் செய்வதற்காக பீகாரில் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டம்: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

பாட்னா: பீகாரில் சுய தொழில் செய்வதற்காக 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிய உள்ளது. இதனால், நவம்பர் அல்லது டிசம்பரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, ‘முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்படும் என்று நிதிஷ்குமார் கடந்த ஆகஸ்டு 29ம் தேதி அறிவித்தார். அதன்படி, பீகாரில் சுய தொழில் செய்ய விரும்பும் பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 அரசு சார்பில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, அம்மாநில அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. ‘இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது பெண்களின் நிலையை மேலும் வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மாநிலத்திற்குள் சிறந்த வேலை வாய்ப்புகளையும் வழங்கும் என்று’ அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், அந்த திட்டத்தை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,‘ மாநிலம் முழுவதும் பெண்களுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிக்கும் முதலமைச்சரின் பெண்கள் வேலைவாய்ப்பு திட்டம் செப்டம்பர் 26ம் தேதி (நாளை) தொடங்கப்படும். நவராத்திரி பண்டிகை நாளில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். இதனை, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்,’என்றார். பெண்கள் பொருளாதார ரீதியில் சுயமாக இருப்பதை உறுதி செய்ய இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொழிலை தொடங்க ரூ.10,000 முதல் தவணையாக வழங்கப்படும். பின்னர் 2வது தவணையாக ரூ.2 லட்சம் வழங்கப்படும். பீகாரில் பெரும்பான்மையான பெண்களின் ஆதரவு நிதிஷ்குமாருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது, தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த திட்டம் தொடங்கப்பட இருப்பது பாஜ கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.