பிரதமர் மோடியின் தாயாரை அவமதித்ததாக கூறி பேரணி பீகார் காங்கிரஸ் அலுவலகம் சூறை: தொண்டர்கள் மீது சரமாரி கல்வீசி தாக்குதல்; பலர் காயம், அமைச்சர்கள் தலைமையில் சென்ற பா.ஜவினர் ஆவேசம்
பாட்னா: பிரதமர் மோடியின் தாயாரை அவமதித்ததாக கூறி பீகார் காங்கிரஸ் அலுவலகத்தை பா.ஜ அமைச்சர் தலைமையிலான குழுவினர் சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தியின் தலைமையில் வாக்காளர் அதிகார யாத்திரை நடந்து வருகின்றது. தர்பங்காவில் இந்த யாத்திரையின்போது அடையாளம் தெரியாத ஒருவர் பிரதமர் மோடி மற்றும் அவரது தாய் ஹிராபென் குறித்து அவதூறான வார்த்தைகளை பேசும் வீடியோ நேற்று முன்தினம் வெளியானது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் பாஜ சார்பில் நேற்று கண்டன பேரணி நடத்தப்பட்டது. எம்எல்ஏ சஞ்சீவ் சவுராசியா, அமைச்சர்கள் நிதின் கபின், சஞ்சய் சரோகி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் திரளான பாஜ தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர். பாட்னாவில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள காங்கிரஸ் மாநில தலைமையகமான சதகத் ஆசிரமம் நோக்கி பேரணியாக சென்றனர்.
பிரதமர் மோடியை அவமதித்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் ராகுல்காந்தி மற்றும் அவரது கூட்டாளிகள் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் பாஜவினர் வலியுறுத்தினார்கள். பேரணி சதகத் ஆசிரமத்தை அடைந்தபோது காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு அங்கு திரண்டு இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காங். தொண்டர்கள் மற்றும் பாஜ ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போலீசார்அங்கு விரைந்தனர். அவர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சதகத் ஆசிரமத்தின் கதவுகளை காங்கிரஸ் கட்சி தொண்டர்களே பூட்டிக்கொண்டதாகவும் பாஜவினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் பாஜ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே பாஜவின் அட்டூழியத்து்ககு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பாட்னா மத்திய காவல்துறை கண்காணிப்பாளர் திக்ஷா கூறுகையில்,’ இரு தரப்பிலிருந்தும் ஏராளமான தொண்டர்கள் காயம் அடைந்துள்ளனர். நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
* கோழைத்தனம்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், ‘வாக்காளர் அதிகார யாத்திரைக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் பிரபலத்தால் குழப்பமடைந்த பாஜ, எங்களை மிரட்டவும் பயமுறுத்தவும் மீண்டும் தனது குண்டர்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
பாட்னாவில் உள்ள எங்கள் மாநில அலுவலகமான சதகத் ஆசிரமத்தின் மீது, அமைச்சர் மற்றும் பிற பாஜ தலைவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமான செயல். இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் மீது பீகார் காவல்துறை கடுமையான மற்றும் முன்மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் கூறினார்.
* மோடியின் தாயாரை அவதூறாக பேசியவர் பா.ஜ தொண்டரா?
பிரதமர் மோடியின் தாயாரை அவதூறாக பேசியதாக வெளியான வீடியோ தொடர்பாக தர்பங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று குற்றவாளியை கைது செய்தனர். அவர் சிங்வாராவில் வசிக்கும் 20 வயது முகமது ரிஸ்வி என்கிற ராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் பா.ஜ தொண்டர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில்,’ பிரதமர் மோடியின் தாயாருக்கு எதிரான அவதூறான கருத்துக்கள் ராகுல்காந்தி யாத்திரையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப பாஜவால் ஏற்பாடு செய்யப்பட்டவை.
இந்தக் கருத்தை அவர்களின் (பாஜவின்) சொந்த கட்சியினரே தெரிவித்துள்ளனர். அவர்கள் எங்கள் யாத்திரையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப ஒரு பிரச்சினையை உருவாக்க விரும்புகிறார்கள். அவர்களின் திருட்டு பிடிபட்டுவிட்டது, எனவே இந்த மக்கள் விரக்தியடைந்துள்ளனர். அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யாருடைய ஆள் என்பதைக் கண்டறிந்தால் தெரியும். பொதுமக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் பாஜ குண்டர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது’ என்றார்.
* ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் அமித் ஷா வலியுறுத்தல்
பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் குறித்த பேச்சுக்களுக்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி இருக்கிறார். அசாம் மாநிலம் கவுகாத்தி ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘வாக்காளர் அதிகார யாத்திரையில் பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் குறித்து அவமதிக்கும் வகையில் விமர்சிக்கப்பட்டதற்கு ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். பீகாரில் ஊடுருவல்காரர்களை காப்பாற்றும் யாத்திரை மூலமாக ராகுல்காந்தியின் அரசியல் மிக குறைந்த மட்டத்தை தொட்டுள்ளது” என்றார்.
* சத்தியத்தின் முன் நிற்க முடியாது: ராகுல்காந்தி
மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில்,’பொய்யும், வன்முறையும் உண்மை மற்றும் அகிம்சையின் முன் நிற்க முடியாது. நீங்கள் விரும்பும் அளவுக்கு அடித்து உடைக்கலாம். ஆனால் நாங்கள் தொடர்ந்து உண்மையையும் அரசியலமைப்பையும் பாதுகாப்போம். சத்யமேவ ஜெயதே’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* பாட்னாவை நெருங்கியது ராகுல் யாத்திரை
ராகுல்காந்தியின் யாத்திரை தற்போது பாட்னாவை நெருங்கி உள்ளது. வரும் திங்கட் கிழமை யாத்திரை பாட்னாவில் முடிவடைய உள்ளது. அப்போது பிரமாண்ட பேரணி நடைபெற உள்ளது. தற்போது பாட்னாவில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள பெட்டியா நகரில் நேற்று யாத்திரை நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆனி ராஜா பங்கேற்றார். 2024 மக்களவைத் தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் இவர், ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டார்.
* மேற்குவங்க காங். அலுவலகம் தகர்ப்பு
பிரதமர் மோடியின் தாயாருக்கு எதிரான அவதூறு பேச்சு தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க காங்கிரஸ் தலைமையகத்தை பாஜக ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். மத்திய கொல்கத்தாவில் உள்ள சிஐடி சாலையில் உள்ள பிதான் பவனில் உள்ள பூங்கொத்துகளை சூறையாடினர். கட்சிக் கொடிகளை எரித்தனர். ராகுல் காந்தியின் உருவப்படங்களில் கருப்பு வண்ணப்பூச்சு பூசினர். கட்சி அலுவலகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக டயர்களை எரித்தனர்.