புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது கூடுதலாக 50 சதவீத வரி விதித்துள்ளது அமெரிக்கா. இந்த நிலையில் ரஷ்யா மற்றும் இந்தியா இடையே மேலும் உறவு வலுப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார். அதை ஏற்று டிசம்பர் மாதம் இந்தியா வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகை உதவியாளர் யூரி உஷாகோவ் கூறுகையில்,’ சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் புடின், பிரதமர் மோடியைச் சந்திப்பார். அப்போது டிசம்பர் மாதம் இந்தியாவில் புடின் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். எங்களுக்கு ஒரு சிறப்பு, நீண்ட உறவு உள்ளது, இந்த உறவை நாங்கள் மதிக்கிறோம்’ என்றார்.