தனியார் முதலீட்டை ஊக்குவிக்க ஆராய்ச்சி, மேம்பாட்டிற்கு ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
புதுடெல்லி: வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளின் முதல் மாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் இதர சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை முதலீட்டை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமை கண்டுபிடிப்பு (ஆர்டிஐ) சிறப்பு நிதியத்தை தொடங்கி வைத்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இந்த நிதியத்தை நிர்வகிக்கும். இத்திட்டத்திற்கு 6 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்த சிறப்பு நிதி, பொதுமக்களுக்கு பயனளிப்பதையும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. தனியார் துறையிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கலாசாரத்தை ஊக்குவிப்பதே அரசின் குறிக்கோள். குறிப்பாக, முதல் முறையாக, அதிக ஆபத்துள்ள, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தியாவில் ஆராய்ச்சி செய்வதை எளிதாக்க நிதி விதிமுறைகள் மற்றும் கொள்முதல் கொள்கைகளில் அரசு பல சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவு இரட்டிப்பாகியுள்ளது. இது புதுமைக்கான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. பதிவுசெய்யப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கை 17 மடங்கு அதிகரித்துள்ளது ’’ என்றார்.
 
 
 
   