டெல்லி: ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை (21.11.2025) தென் ஆப்பிரிக்கா ஜோஹன்னஸ்பர்க் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. நாளை முதல் 23ஆம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். ஜி-20 உச்சி மாநாட்டின் மூன்று அமர்வுகளிலும் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் வருகிற 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 20-வது ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதன்மூலம் முதன்முறையாக ஆப்பிரிக்க மண்ணில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது.
இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை (நவ.21) தென் ஆப்பிரிக்கா செல்கிறார். தொடர்ந்து உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். குறிப்பாக, ஜி20 நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் கருத்துகளை பிரதமர் மோடி முன்வைப்பார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.
மேலும் இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களை கண்டித்து இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


