புதுடெல்லி: நாடு முழுவதும் பெண்கள், இளம் பெண்கள், குழந்தைகளுக்கான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சேவைகளை வலுப்படுத்துவதற்காக ‘ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்பம்‘ பிரசார இயக்கத்தையும், 8வது ஊட்டச்சத்து மாதத்தையும் பிரதமர் மோடி வரும் 17ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த பிரசாரத்தை ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும், ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து வழிநடத்துகின்றன.
இப்பிரச்சாரத்தின் கீழ், நாடு முழுவதும் சுகாதார முகாம்கள், சுகாதார சேவைகளை வழங்குவதை சுகாதார அமைச்சகம் உறுதி செய்யும். அதே சமயம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஊட்டச்சத்து மாதம் நடவடிக்கைகளை இத்திட்டத்துடன் ஒருங்கிணைக்கும். இரு அமைச்சகங்களும் இணைந்து, ரத்த சோகை தடுப்பு, சமச்சீர் உணவுமுறைகள் மற்றும் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளும்.