Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் அத்துமீறி நுழைந்த பாமக எம்எல்ஏ: அதிரடி கைது

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில், ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்த பாமக எம்எல்ஏவை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், மேட்டூரில் மேட்டூர் அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில், தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரமும், 2வது அலகில் 600 மெகாவாட் திறன் கொண்ட 1 அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். இதில் முதல் பிரிவு தனது ஆயுள் காலத்தை கடந்து செயல்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்காக எரியூட்டப்படும் நிலக்கரியில் எஞ்சும் சாம்பல் உலர் சாம்பலாகவும், ஈரசாம்பலாகவும் வெளியேற்றப்படுகிறது. இந்த சாம்பல் சிமெண்ட் உற்பத்திக்கும், செங்கல் உற்பத்திக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொறியாளர்களின் அலட்சியம் காரணமாக நிலக்கரி சாம்பல் ராட்சத புகை போக்கிகள் வழியாக வெளியேறி, மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு வருகிறது.

இதனால் காற்றில் சாம்பல் பரவாமல் தடுத்த பிறகு, மேட்டூர் அனல் மின்நிலையத்தை இயக்க வேண்டும் என்று கோரி, மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் தனது ஆதரவாளர்களுடன், நேற்று அனல் மின் நிலைய நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் மேட்டூர் அனல் மின் நிலைய பொறியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திடீரென எம்எல்ஏ சதாசிவம், மேட்டூர் அனல் மின் நிலையத்தின் உள்ளே தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அனல் மின் நிலைய அதிகாரிகளும், பாதுகாவலர்களும் ஸ்தம்பித்து நின்றனர். தடை செய்யப்பட்ட அனல் மின் நிலைய பகுதிக்கு அத்துமீறி சென்றதால், மேட்டூர் போலீஸ் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார், எம்எல்ஏ சதாசிவத்தையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்து ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றனர். அப்போது, பாமகவினர் சிலர் சாலையில் படுத்து ஜீப்பை மறித்தனர். பின்னர், அவர்கள் வழிவிட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் திருமண மண்பத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேட்டூர் எம்எல்ஏ கைது செய்யப்பட்டதால், மேட்டூர் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.