பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் கோடி நிதி விடுவிப்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு விவசாயிகள் இணைந்து பணியாற்ற வேண்டும்: கோவை மாநாட்டில் பிரதமர் மோடி வேண்டுகோள்
கோவை: இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை கொடிசியா அரங்கில் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு 21ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதியம் தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர் காரில் கொடிசியா அரங்கம் வந்தார்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக இயற்கை வேளாண் பொருட்கள் கண்காட்சி அரங்கினை பிரதமர் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது இயற்கை வேளாண் பொருட்கள் மற்றும் சாகுபடி முறைகள் குறித்து இயற்கை விவசாயிகளிடம் கலந்துரையாடினார். பின்னர், கொடிசியா அரங்கில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பங்கேற்று, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 21வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார். பின்னர், மாநாட்டில் பிரதமர் மோடி வணக்கம் என தமிழில் கூறி பேச ஆரம்பித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: விவசாய மக்களுக்கும், டிஜிட்டல் வழியாக இணைந்துள்ள விவசாயிகளுக்கு வணக்கம். நான் உங்களிடம் முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் புட்டபர்த்தியில் சாய்பாபா நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அந்த நிகழ்ச்சி சற்று அதிகநேரம் நடந்தது. அதனால், நான் இங்கு வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. இதற்காக எனது மன்னிப்பை கூறுகிறேன். நான் மேடைக்கு வந்த போது பல விவசாயிகள் தங்களின் மேல் துண்டை சுழற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு பீகாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ? என்று நம்பிக்கை வந்துவிட்டது.
கோவை புண்ணிய பூமியில் முதலாவதாக நான், மருதமலை முருகனை வணங்குகிறேன். கோவை கலாச்சாரம், இரக்கம் மற்றும் படைப்பாற்றலின் பூமி. தென்னிந்தியாவின் பவர் சென்டராக உள்ளது. இங்கு இருக்கும் ஜவுளித்துறை நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்கு அளிக்கிறது. கோவை முன்னாள் எம்.பி., சிபி ராதாகிருஷ்ணன் இப்போது துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. இயற்கை விவசாயம் எனது மனத்திற்கு நெருக்கமானது. இந்த தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு நிகழ்ச்சிக்காக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மாநாட்டில் கண்காட்சி அரங்குகளை பார்த்த போது, சிலர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பி.எச்.டி படித்துவிட்டும், நாசாவில் சந்திரயான் திட்டத்தில் வேலை செய்துவிட்டும் விவசாயத்திற்கு வந்துள்ளது தெரியவந்தது. சிலவர் விவசசாயம் செய்வது மட்டுமின்றி பல விவசாயிகளை தயார் செய்கின்றனர். இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். ஒருவேளை நான் இந்த நிகழ்ச்சிக்கு வராமல் இருந்திருந்தால், நான் எனது வாழ்வில் சில விஷயங்களை இழந்து இருப்பேன். இங்கு வந்து நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். தமிழக விவசாயிகளுக்கு இருக்கும் உத்வேகத்திற்கு பாராட்டுகள்.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இயற்கை வேளாண்மை சார்ந்த தேசிய இயக்கத்தின் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் இணைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கூட சுமார் 35,000 ஹெக்டேர் நிலத்தில் இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறு தானியங்களின் சாகுபடியை இயற்கை வேளாண்மையுடன் இணைப்பதால் பூமியை பாதுகாக்க முடியும். தென்னிந்தியாவின் விவசாயிகள் இயற்கை வழி வேளாண்மையின் பாரம்பரியத்தை நிரந்தரமாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க எதிர்காலத்திற்கு தேவையான வேளாண் சூழலியலை கட்டமைக்க வேண்டியது அவசியம். ஒரு ஏக்கர், ஒரு பருவம் என்ற நடைமுறையை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.
தென்னிந்தியா விவசாயத்தின் ஒரு வாழும் பல்கலைக்கழகமாக இருந்து வருகிறது. இந்த பகுதியிலே உலகத்தில் மிகப் பழமையான அணைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்தை ஒரு ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ள வேண்டும். இயற்கை விவசாயத்தை வேளாண்மையை பாடத்திட்டத்தில் முக்கிய பங்காக மாற்றுங்கள். இந்த மாநாடு தேசத்தின் இயற்கை வேளாண்மைக்கு ஒரு புதிய திசையை இருக்கும். இங்கிருந்து உண்டாகும் புதிய கருத்துக்கள் எண்ணங்கள் மூலம் புதிய தீர்வுகள் பிறக்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, உழவர் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மேலாண்மை குழு தலைவர் கருப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* கூட்டம் இல்லாததால் அப்செட்
கோவையில் இயற்கை விவசாயிகள் மாநாட்டினை துவக்கி வைக்க பிரதமர் மோடி நேற்று மதியம் கோவை விமான நிலையம் வருகை தந்தார். பின்னர் கார் மூலம் விமான நிலையத்தில் இருந்து கொடிசியா அரங்கத்திற்கு சென்றார். அப்போது விமான நிலையத்தின் முகப்பில் இருந்து கொடிசியா வரை சாலையின் இரண்டு பக்கங்களிலும் பாஜ, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் வரவேற்றனர். அவிநாசி சாலையில் போதிய மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சிக்கே போதிய கூட்டம் கூடாததால், பாஜவினர் அதிருப்தி அடைந்தனர். இதே போல பிரதமர் கலந்து கொண்ட விவசாயிகள் மாநாட்டிலும் ஏராளமான இருக்கைகள் காலியாகவே கிடந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு போதிய தண்ணீர் வசதி செய்து தராததால், அவர்கள் அவதிக்கு உள்ளாகினர்.
* ரூ.200 கொடுத்து கூலித்தொழிலாளர்களை கூட்டி வந்த பாஜவினர்
பிரதமர் மோடியின் ரோடு ஷோவை பிரமாண்டமாக காட்ட வேண்டும் என்பதற்காக, பா.ஜ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கட்சி தொண்டர்கள், விவசாயிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் வேறுவழியின்றி கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கூலி வேலைக்கு செல்லும் நபர்களுக்கு ரூ.200 கொடுத்து தனி வாகனங்களில் அழைத்து வந்தனர்.
* உணவின்றி தவித்த விவசாயிகள்
பிரதமர் மோடி நேற்று பிற்பகல் 1.25 மணிக்கு கொடிசியா அரங்க விழா மேடைக்கு வருவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணமாக காலை 10 மணி முதலே ஏராளமான விவசாயிகள் விழா அரங்கில் அமரவைக்கப்பட்டனர். மாநாடு முடிவடைய மாலை 4.30 மணி ஆகி விட்டது. அதன் பிறகே மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதனால் மாநாட்டில் கலந்து கொண்ட விவசாயிகள் கடும் அதிருப்தியைடந்தனர்.
* டாஸ்மாக் மூடல்
கோவையில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று வருகை தந்ததையொட்டி மாநாடு நடைபெற்ற இடங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள 15 அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள், 5 பொழுதுபோக்கு மனமகிழ் மன்ற பார்கள் (எப்எல் 2) மற்றும் 18 நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள் (எப்எல் 3) ஆகியவை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது
* விமான பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி
பிரதமர் மோடி வருகையொட்டி, கோவை விமானநிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. விமானநிலையத்தில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டதால், விமான பயணிகள் தங்களின் உடைமைகளுடன் பல கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதேபோல், பிரதமர் வருகையொட்டி, ஜி.டி மேம்பாலம் மதியம் 12 மணியளவில் நேற்று மூடப்பட்டது. இதனால், அவினாசி ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
* மோடிக்கு எலுமிச்சை பழம் கொடுத்த அண்ணாமலை: வரவேற்பில் கடைசி இடம் ஒதுக்கியதால் விரக்தி
கோவை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என். ரவி, ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜ தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பின் போது அதிமுக, பாஜ முக்கிய நிர்வாகிகளுக்கு அடுத்த படியாக கடைசியாக அண்ணாமலைக்கு இடம் அளிக்கப்பட்டு இருந்தது. சமீப காலமாக பாஜ மேலிடத்துடன் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ள அண்ணாமலைக்கு கடைசி இடம் வழங்கப்பட்டதால் விரக்தியடைந்தார். பிரதமர் மோடியை வரவேற்ற அண்ணாமைலை, ஒரு எலுமிச்சை பழத்தை அவருக்கு கொடுத்தார். இதை வாங்கிய பிரதமர் மோடி அண்ணாமலை தோளில் தட்டிக் கொடுத்தபடி சென்றார்.


