Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாமக சிறப்பு பொதுக்குழு இன்று கூடுகிறது அன்புமணிக்கு கல்தா, காந்திமதிக்கு பதவி: கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச ராமதாஸ் தீவிரம்

திண்டிவனம்: பாமக சிறப்பு பொதுக்குழு இன்று கூடும் நிலையில், அன்புமணியை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, மூத்த மகள் காந்திமதிக்கு முக்கிய பதவியை வழங்க ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணிக்கு இடையேயான அதிகார போட்டி நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கட்சியை கைப்பற்றும் போட்டியில் இருவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழுவின் ஆதரவை பெற்று கட்சியை வழிநடத்த ராமதாஸ் முடிவு செய்து இம்மாதம் 17ம் தேதி பொதுக்குழு நடக்கும் என முதலில் அறிவித்தார்.

ஆனால் அன்புமணியோ முந்திக்கொண்டு கடந்த 9ம் தேதியே மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்டினார். இந்த கூட்டத்தில் 2026 ஆகஸ்ட் வரை தலைவராக அன்புமணி நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது.அன்புமணியின் பதவிக்காலம் மே 28ம் தேதியுடன் முடிந்துவிட்டது என்றும், அவரது தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் ராமதாஸ் தரப்பை சேர்ந்த பொதுச்செயலாளர் முரளி சங்கர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் ராமதாஸ் சார்பில் அவரது தனி செயலாளர் சுவாமிநாதன், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார். அதில், பாமக கட்சி விதி 13க்கு எதிராக நிறுவனரின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதலின்றி அன்புமணி ஒரு வருடத்திற்கு பதவி நீட்டிப்பு செய்தது, சட்டவிரோதமானது என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அன்புமணி தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் திடீரென தைலாபுரம் தோட்டம் வந்தார். தாய் சரஸ்வதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரிடம் ஆசி பெற்றார். அப்போது ராமதாசும், அன்புமணியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோதும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இந்நிலையில் ஏற்கனவே ராமதாஸ் அறிவித்தபடி பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் பட்டானூரில் நடக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க 600 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட 6 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இதில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் முகம்மது சையது உசேன், முன்னாள் தலைவர் தீரன், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் கட்சி நிறுவனரின் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவை கூட்டி தன்னை தானே தலைவராக அறிவித்துக் கொண்ட அன்புமணியை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் 80 வயதை கடந்த ராமதாஸ், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்பதால் கட்சியை வழிநடத்த தனது மூத்தமகள் காந்திமதிக்கு முக்கிய பதவி வழங்க கட்சி விதியில் சில மாற்றங்களை கொண்டு வந்து அதற்கு பொதுக்குழுவின் ஒப்புதலை பெறவும் நிதீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து ராமதாஸ் கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு அதன்பின் முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி சம்பந்தமாக முடிவெடுக்க இன்று கூடும் பொதுக்குழு, ராமதாசுக்கு அதிகாரம் அளிக்கும் என தெரிகிறது.

அன்புமணி பாஜ கூட்டணியை நோக்கி நகர்ந்து செல்வதால் ராமதாஸ் அதற்கு மாற்றாக ஒரு முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது. மொத்தம் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் இதே பட்டானூரில் நடந்த புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில்தான் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் பரசுராமனை ராமதாஸ் அறிவித்தார். இதற்கு மேடையிலே மைக்கை தூக்கிபோட்டு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த ராமதாஸ், நான் உருகாக்கிய கட்சி இது. என் பேச்சை கேட்காதவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம் என கூறியிருந்தார். இந்த சம்பவத்துக்குபிறகு தான் பாமக இரண்டாக பிளவுபட்டது. கட்சி பிளவுபட்ட இடத்திலிருந்தே ராமதாஸ் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து அன்புமணியை கட்சியிலிருந்து வெளியேற்றி கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவார் என தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* அன்புமணியுடன் சமரசமா? திட்டமிட்ட பொய், சதி: ராமதாஸ் ஆவேசம்

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் எனது தலைமையில் நாளை (இன்று) சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சிலர் வதந்தி பரப்புவதாக செய்தி வந்துள்ளது. இதை யாரும் நம்ப வேண்டாம், என்றார். அவரிடம் வதந்திக்கு யார் காரணம் என நிருபர்கள் கேட்க, உங்களுக்கே தெரியுமே என ராமதாஸ் பதிலளித்தார். மேலும் அன்புமணி வந்துசென்ற நிலையில் வதந்தி பரவியுள்ளதாக கூற, இருக்கலாம். அவர் வணக்கம் சொன்னார், நானும் வணக்கம் சொன்னேன்.

அவ்வளவுதான். நான் அவரிடம் வேறு எதுவும் பேசவில்லை. பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதால் கட்டாயம் அனைவரும் வரவேண்டும், என்றார். செயல் தலைவருக்கு அழைப்பு இருக்கிறதா என கேட்டபோது, அவர் செயல் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் தலைவர் என்று கூறி ஏதேதோ செய்து வருகிறார் எனத் தெரிவித்தார். மேலும் அன்புமணியை நீங்கள் சந்தித்ததால் சமாதானமானதாக அவரது தரப்பினர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றார்களே என்ற கேள்விக்கு, அது முற்றிலும் பொய். அதுவும் ஒருதிட்டமிட்ட சதி. 2 நபர்கள் எப்போதும் அவருடன் வந்து புகைப்படம் எடுத்தபடியே இருக்கின்றனர் என்றார். மேலும் சமாதானத்திற்கு வாய்ப்பு உள்ளதா என கேட்டபோது, மீண்டும் போக போகத் தெரியும்... என்ற பாடலை பாடினார்.

* மகள் காந்திமதியுடன் திருவக்கரை கோயிலில் சரஸ்வதி சாமி தரிசனம்

வானூர் தாலுகா திருவக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திரமவுலீஸ்வரர், வக்ரகாளியம்மன் கோயிலில் பாமக நிறுவனர், தலைவர் ராமதாஸ் மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்திமதியுடன் வந்து தரிசனம் செய்தார். அதையடுத்து சந்திரமவுலீஸ்வரர் மற்றும் அம்பாள் உள்ளிட்ட கோயில்களில் சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் தைலாபுரம் புறப்பட்டு சென்றனர்.