பாமக நிறுவனர், தலைவராக ராமதாஸ் தொடர்ந்து செயல்படுவார்; அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை: பாமக பொதுக்குழுவில் தீர்மானம்
திண்டிவனம்: புதுச்சேரி அருகே பட்டானூரில் இன்று நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமகவின் நிறுவனர், தலைவராக ராமதாஸ் தொடர்ந்து செயல்பட பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. மேலும், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்துள்ளது. அன்புமணி மீது 16 பரபரப்பு குற்றச்சாட்டுகளும் பொதுக்குழுவில் கூறப்பட்டுள்ளது. பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையேயான மோதல் 8 மாதங்களாக ஒரு முடிவுக்கு வராமல் நீடித்துக்கொண்டே வருகிறது. இருவரும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை நீக்குவதும் சேர்ப்பதுமாக இருந்துவந்தனர். தற்போது கட்சியை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் இருவரும் இறங்கிவிட்டனர்.
கடந்த 9ம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்டிய அன்புமணி தனது தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்துக்கொண்டார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர். கட்சி நிறுவனரான எனது அனுமதி இன்றி நடந்த இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என ராமதாஸ் அறிவித்தார். இது குறித்து தேர்தல் கமிஷனுக்கும் புகார் அளித்தார். இந்நிலையில், ராமதாஸ் அறிவித்தபடி புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் பட்டானூர் சங்கமித்ரா அரங்கில் பாமக மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு ராமதாஸ் தலைமையில் துவங்கியது. கவுர தலைவர் ஜி.கே.மணி, மாஜி தலைவர் தீரன், பொதுச்செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையது மன்சூர் உசேன், வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, அருள் எம்எல்ஏ, ராமதாசின் மூத்த மகள் காந்திமதி, அவரது மகன் முகுந்தன் பரசுராமன், மகளிர் அணி சுஜாதா கருணாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள். 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர், தலைவர் என 4000 பேர் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் எந்த இடத்திலும் அன்புமணி பெயரோ, புகைப்படமோ இடம் பெறவில்லை. ராமதாசின் படம் மட்டுமே பிரதாமாக இடம் பெற்றது. பொதுக்குழுவுக்கு வந்த நிர்வாகிகள் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. அய்யா முடிவே இறுதியானது என்ற பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: பாமக நிறுவனராகவும், தலைவராகவும் இனி ராமதாசே தொடர்ந்து செயல்படுவார்.பாமக ெபாதுக்குழுவுக்கு நிறுவனர் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் கொடுத்த பின்பு நிறுவனர் அழைக்கப்பட்டு அவர் முன்னிலையில் தான் அவரின் வழிகாட்டுதல் படி தான் பொதுக்குழு நடத்தப்பட வேண்டும் என்று இந்த விதியில் திருத்தம் செய்யப்படுகிறது. வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் உரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வெற்றிக் கூட்டணியை உருவாக்க ராமதாசுக்கு அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீடை ராமதாஸ் தலைமையில் மீண்டும் போராடி உறுதியாக பெறுவோம் என்பன உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 16 அம்ச அறிக்கையை கவுரவ தலைவர் ஜி.கே.மணி வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது: ராமதாசை சந்திக்க சென்றவர்களை பனையூருக்கு கடத்தி சென்றது. மக்கள் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக ராமதாசின் முகத்தை கூட காட்டாமல் இருப்பது. சுற்று சூழல் பாதுகாக்க உருவாக்கிய பசுமை தாயகம் அமைப்பை அன்புமணி திட்டமிட்டு கைப்பற்றியது. அன்புமணி கட்சி விதிக்கு புறம்பாக பொதுக்குழு என்ற பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தி அதில் நாற்காலியை வைத்து சென்னை தலைமை அலுவலகத்தை ராமதாசுக்கு தெரியாமல் வேறு முகவரிக்கு மாற்றியது. ராமதாஸ் செய்த நியமனங்கள், நீக்கங்கள் செல்லும். அன்புமணி செய்த எல்லா நியமனங்களும் செல்லாது.
சட்டமன்ற உறுப்பினர் ஜி. கே மணி, சேலம் அருள் உடல் நலம் பாதிக்கப்பட்ட போது கிண்டலாக பேசியது. கடந்த பொதுக்குழு கூட்டத்தில் ராமதாசின் முன்னிலையில் மைக்கை தூக்கிபோட்டு அன்புமணி அவமானப்படுத்தியது. தனி அலுவலகம் வைத்திருப்பதாக அறிவித்தது. ராமதாசை 40 முறை தொடர்புகொள்ள முயற்சித்ததாக அன்புமணி பொய் சொன்னது. ராமதாஸ் மனதை புண்படுத்தும் வகையில் பேசியது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளை ஒழுங்கு நடவடிக்கை குழு கூறியுள்ளது. மேலும், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கவும் ஒழுங்கு நடவடிக்கை குழு வலியுறுத்தி உள்ளது.