பாமகவுடனும், என்னோடும் எந்த சம்பந்தமும் இல்லை: ஆயுதங்களுடன் அரசியல் செய்கிறார் அன்புமணி; எங்களுக்கு ஏதாவது நடந்தால் அவரும், சவுமியாவும்தான் காரணம்; ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு
திண்டிவனம்: பாமகவுடனும், என்னோடும் அன்புமணிக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஆயுதங்களை வைத்து அரசியல் செய்கிறார். எங்களுக்கு ஏதாவது நடந்தால் அன்புமணியும், சவுமியாவும்தான் காரணம் என்று ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ராமதாஸ் ஆதரவாளர்கள், அன்புமணி ஆதரவாளர்கள் பயங்கரமாக மோதி கொண்ட நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ஒரு கும்பல் இருக்கிறது. அந்த கும்பலுக்கு தலைமை அன்புமணியும், அவரது துணைவியார் சவுமியாவும் இருக்கிறார்கள். நான் அமைதியாக கட்சியை நடத்தி கொண்டிருக்கும்போது அதில் பிளவு ஏற்பட்டுள்ளது என அனைவரும் நினைக்கும் வகையில் அவர்களின் செயல் அருவருக்கதக்க வகையில் இருக்கிறது. உங்கள் வளர்ப்பு சரி இல்லை என சொல்கிறார்கள். அந்த கும்பலில் உள்ளவர்கள் எல்லோருமே நான் வளர்த்த பிள்ளைகள்தான். என்னை அன்போடு அய்யா... என அழைத்தவர்கள்தான். ஒரு சில காரணங்களால் இப்போது அந்த கும்பலிடம் சென்று அவர்களின் அறிவுரைப்படி என்னை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
என்னோடு 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இப்போது 2 பேர் என்னோடு இருக்கிறார்கள். அதில் 3 பேர் அன்புமணி கும்பலோடு தெரியாமல் போய் விட்டார்கள். தமிழ்நாட்டில் பிறர் மனம் புண்படாத வகையில் நாகரிகமாக கட்சியை வளர்த்து வந்த என்னை அன்புமணியும், அவரது துணைவியார் சவுமியாவும் என்னுடன் இருந்த சிலரை அழைத்து பொறுப்புகளை கொடுத்துள்ளார்கள். கோமாளித்தனத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத் தளங்களில் என்னை பற்றியும், ஜி.கே.மணி பற்றியும் கேவலமாக பேசுவது, தூண்டிவிடுவது என அன்புமணி தலைமையில் செயல்பட்டுவரும் கும்பல் செய்து வருகிறது.
ஒரே கட்சியில் இருந்தவர்களை பிரித்து தன்பக்கம் சேர்த்துக் கொண்டு கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை கொண்டு அடிதடி அரசியல் செய்கிறார்கள். அந்த கும்பல் இன்னும் துப்பாக்கியைத் தான் பயன்படுத்தவில்லை. அதையும் சீக்கிரம் பயன்படுத்தி விடுவார்கள். அவர்களை தூண்டி விட்டதால் அவர்கள் செய்த தவறுக்கு காவல்துறை இப்போது வழக்குபதிவு செய்து இருக்கிறார்கள். இதனை தான் அன்புமணி டீசன்ட் அண்ட் டெவலப்மென்ட் பாலிட்டிக்ஸ் என்று இவ்வளவு நாளாக சொல்லி வந்தாரா? என தெரியவில்லை.
வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் திட்டுகிறார்கள். இதுபோன்ற ஒரு இழிவான கலாச்சாரத்தை உருவாக்கி விட்டார்கள். பாமக கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் இதுபோன்ற சமூக ஊடக செய்திகளை பார்க்காதீர்கள். உனக்கு அரசியல் செய்ய வேண்டும் என்றால் செய்துகொள். பாமக பெயரையோ, என் பெயரையோ பயன்படுத்தக் கூடாது. இதனை நான் பலமுறை சொல்லி விட்டேன். அப்பன் பெயரை வேண்டும் என்றால் R என இன்ஷியலை போட்டுக் கொள். அதனை தவிர என் பெயரை பயன்படுத்தக் கூடாது. 21 பேரை சேர்த்து கொண்டு ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து கொள். அந்த கட்சிக்கு பெயர் வேண்டும் என்றால் நல்ல பொருத்தமான பெயரை நான் சொல்கிறேன். என்னோடும், பாமகவோடும் உனக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், ராஜ்ய சபா உறுப்பினர், கட்சித் தலைவர் என பல்வேறு பதவியில் இருந்து அனுபவித்து விட்டாய். இந்த பதவிகளை எல்லாம் உனக்கு கொடுத்து நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். இனிமேல் என்னுடைய பாசமுள்ள கட்சிக்காரர்கள் மீது சுண்டுவிரல் பட்டாலும் அதற்கு அன்புமணியும், அவரது மனைவி சவுமியாவும்தான் காரணம். என் உயிரைவிட மேலாக என் கட்சிக்காரர்களை பாசத்தோடு நான் வளர்த்துள்ளேன். அன்புமணியும் அவருடன் இருக்கும் அந்த கும்பலும் திருந்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அந்த கும்பல் இன்னும் துப்பாக்கியைத் தான் பயன்படுத்தவில்லை. அதையும் சீக்கிரம் பயன்படுத்தி விடுவார்கள்.
* எனது நண்பர் கலைஞர் அன்று சொன்னதுதான்... அன்புமணிக்கு இன்று அட்வைஸ்
‘தமிழகம் அமைதி பூங்காவாக திகழ வேண்டும் என அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், மறைந்த தலைவர்களும் விரும்பினார்கள். நாகரிகமான வகையில் அரசியல் செய்ய வேண்டும். இப்படி கத்தி, கடப்பாரை வைத்து கொண்டு அரசியல் செய்வதுதான் நாகரிகமான அரசியலா. ஒரு சீனியர் லீடர், எனது நண்பர் கலைஞர் அடிக்கடி சொல்வார். நாகரிகமான அரசியலை செய்யவேண்டும் என்று. அந்த வகையில் உனக்கு நான் சொல்கிறேன். நீ புதிய கட்சியை ஆரம்பித்துக் கொள். நான் 46 ஆண்டு உழைத்து உருவாக்கிய கட்சியில் எல்லா பதவி சுகத்தையும் நீ அனுபவித்து விட்டாய். தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.இறுதியில் தர்மமே வெல்லும்’ என்று ராமதாஸ் தெரிவித்தார்.
* நான் செய்த 2 தவறு
‘ஒற்றுமையாக 46 ஆண்டு காலமாக 80 வயதுள்ள சொந்தங்கள், அதன்பிறகு வந்தவர்களை எல்லாம் உயிருக்கும் மேலாக நினைத்து சங்கத்தையும், கட்சியையும் நடத்தி வந்தேன். அதில் சில தவறுகளை நான் செய்தது உண்டு. அதில் ஒன்றுதான் அன்புமணியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக நியமித்தது. 2வது தவறு கட்சியின் தலைமை பொறுப்புக்கு அவரை கொண்டு வந்தது’ என ராமதாஸ் தனது பேட்டியின்போது வேதனையுடன் தெரிவித்தார்.
* டிசம்பர் 30 பொதுக்குழு கூட்டணி முடிவாகும்
டிசம்பர் 30ம்தேதி சேலம் மாவட்டம் தலைவாசலில் எங்களின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கருத்துக்கள் கேட்கப்பட்டு யாரோடு கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
* ராமதாஸ் பற்றி என்னிடம் கேட்காதீங்க: அன்புமணி காட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர் கணவாய் பகுதியில் நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பால பணிகளை அன்புமணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேட்டியளித்த அவரிடம், அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது நான் செய்த பெரிய தவறு என்று ராமதாஸ் தெரிவித்துள்ளாரே என்று கேட்டதற்கு அதை பற்றி எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. இதுகுறித்து என்னிடம் கேள்வி கேட்காதீர்கள் என அன்புமணி காட்டமாக கூறினார். முன்னதாக நேற்று மாலை தாக்குதலில் காயமடைந்து சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 நிர்வாகிகளை அன்புமணி சந்தித்து ஆறுதல் கூறினார்.
