Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாமகவில் மாம்பழ சின்னம் யாருக்கு? தனக்கு ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் ராமதாஸ் மனு; இரு தரப்பும் கோரினால் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு

சென்னை: பாமகவில் மாம்பழச் சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தனக்கு ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் மனு அளித்துள்ளார். அதே நேரம் ராமதாஸ், அன்புமணி என இருதரப்பும் கோரினால் சின்னம் முடக்கப்படவும் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்ச்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே அதிகார மோதல் போக்கு கடந்த 8 மாதங்களுக்கு மேலாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 16 குற்றச்சாட்டுகளை கூறி அன்புமணியை தலைவர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ராமதாஸ் நீக்கி விட்டார்.

பாமக கட்சி மற்றும் சின்னத்திற்கு எந்தவித உரிமையும் கூறக்கூடாது என்பதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார். பாமக தலைவர் பதவியை தாமே எடுத்துக் கொண்ட ராமதாஸ், செயல் தலைவராக மகள் காந்திமதியை நியமனம் செய்தார். அன்புமணி எதையும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அவர் மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் தொகுதி வாரியாக சுற்றுப்பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொது சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

நவம்பர் 12ம் தேதி முதல் இதற்கான பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அன்புமணி உடனான மோதல் காரணமாக பாமக இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், மாம்பழ சின்னத்தை கைப்பற்றப் போவது தந்தையா, மகனா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில், ‘‘நான் தலைவராக உள்ள பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் மாம்பழ சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமகவின் அடையாளம் மாம்பழ சின்னம் என்பதால், அதனை கைப்பற்றும் முயற்சியில் ராமதாஸ் ஈடுபட்டுள்ளார். இதனால் அன்புமணி தரப்பின் முடிவு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரு தரப்பும் மாம்பழ சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை நாடினால், அந்த சின்னம் முடக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.