பாமக சட்டப்பேரவை கட்சி தலைவர் ஜி.கே.மணியை மாற்ற வேண்டும்: பேரவை செயலரிடம் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்மனு
சென்னை: பாமக சட்டப்பேரவை கட்சி தலைவர் ஜி.கே.மணியை மாற்ற வேண்டும் என்று அன்புமணி ஆதரவு எம்எல்ஏ.க்கள் நேற்று சட்டப்பேரவை செயலாளரிடம் மனு அளித்தனர். பாமக கட்சி யாருக்கு சொந்தம் என்பதில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவியில் இருந்து நீக்குவதும், புதிய நிர்வாகிகளை நியமிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. தற்ேபாது, பாமகவில் 5 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். இதில், 3 பேர் அன்புமணிக்கு ஆதரவாகவும், 2 எம்எல்ஏக்கள் ராமதாசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக தலைவராக அறிவித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ராமதாஸ் இதற்கு மறுப்பு தெரிவித்தார். கடந்த ஜூலை 2ம் தேதி ராமதாஸ் ஆதரவாளராக செயல்பட்டு வரும் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் சேலம் அருளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அன்புமணி அறிவித்தார். இதையடுத்து, பாமக சட்டப்பேரவை கொறடா பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று சபாநாயருக்கு மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெங்கடேஸ்வரன் (தர்மபுரி தொகுதி), சிவகுமார் (மயிலம்), சதாசிவம் (மேட்டூர்) ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு வழக்கறிஞர் பாலு தலைமையில் சென்னை, தலைமை செயலகம் வந்தனர். இவர்கள், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனை சந்தித்து அன்புமணி கையெழுத்திட்ட ஒரு மனுவை அளித்தனர். அதில், பாமக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை பனையூரில் பாமக அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அதில், பாமக சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை விடுவித்து, புதிய தலைவராக தர்மபுரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் பதவிக்கு மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு நான் ஒப்புதல் அளித்துள்ளேன். எனவே, தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆவணங்களில் இந்த மாற்றங்களை பதிவு செய்து, உரிய ஆணைகளை விரைந்து பிறப்பிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அதேபோன்று, பாமக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினர் இரா.அருள் நீக்கப்பட்டுள்ளார். அதனால் பாமக கொறடாவாக அவர் செயல்பட அனுமதிக்க கூடாது. அவருக்கு பதில் எம்எல்ஏ சிவக்குமார் கட்சியின் புதிய கொறடாவாக தேர்ந்தெடுக்கப்பட்டது கடந்த ஜூலை 3ம் தேதி கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது என்றும் மற்றொரு கடிதத்தில் அன்புமணி கூறியுள்ளார். இந்த மனு மீது சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பரிசீலனை நடத்தி இறுதி முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் பாமகவின் ராமதாஸ் - அன்புமணி மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
* ஜி.கே.மணி மாற்றமா? சபாநாயகர் பதில்
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, பாமக சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஜிகே மணியை மாற்ற வேண்டும் என பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதே? என கேட்டனர். அதற்கு சபாநாயகர், ‘இதுகுறித்து சட்டமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம்’ என்றார்.