Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

17ம் தேதி பாமக பொதுக்குழு திருப்புமுனையாகும் பணம் கொடுத்து என் மீது அவதூறு: மக்கள் பாடம் புகட்டுவார்கள், ராமதாஸ் பரபரப்பு பேட்டி

திண்டிவனம்: சமூக வலைதளத்தில் என் மீதும், கவுரவ தலைவர் ஜி.கே.மணி மீதும் பணம் கொடுத்து அவதூறு செய்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். பட்டானூரில் 17ம்தேதி நடைபெறும் பாமக பொதுக்குழு திருப்புமுனையை ஏற்படுத்தும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி:

கடந்த 10ம் தேதி பூம்புகாரில் நடந்தது மகளிர் மாநாடு அல்ல, பெருவிழா. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும் வந்திருந்தனர். கிட்டதட்ட 6 கி.மீ. மேல், வாகனங்கள் மாநாடு நடந்த இடத்திற்கு வர முடியவில்லை. வரும் 17ம் தேதி பட்டானூர் தனியார் திருமண மண்டபத்தில் வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு நடக்கிறது. யாரும் நடத்தாத பொதுக்குழுவாக இது அமையப்போகிறது. அதற்கு மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஏற்பாடு செய்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி கேவலமாக பேசுபவர்கள் சொல்லிட்டு போகட்டும். கவுரவ தலைவர் ஜி.கே.மணியை பற்றியும் கேவலான முறையில் ஒரு கும்பல் திட்டமிட்டு அவதூறு செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி எழுதுபவர்களுக்கு பணமும் பரிமாறப்பட்டதாக சொல்கிறார்கள். இதற்கு பின்னணியில் இருந்து காசு ெகாடுத்து இயக்குகின்ற அவர்களை பற்றிதான் நாம் சிந்திக்க வேண்டும். இதுவா வளர்ச்சி, இதுவா முன்னேற்றம். இது அழிவை குறிக்கும் பாதை. யார் செய்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். அதற்காக நாங்கள் எங்கள் பயணத்தை நிறுத்த போவதில்லை.

எங்கள் பயணம் இன்னும் வேகப்படும். போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும். ஏற்றதோர் கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன், எவர் வரினும் நில்லேன், அஞ்சேன் என்ற வரிகளுக்கு ஏற்ப செயல்படுவேன். மக்கள் அவர்களுக்கு உரிய முறையில் பாடம் கற்பிப்பார்கள். என்னை பற்றி அவதூறாக பேச பணம் கொடுக்கிறார்கள் என்றால் நாம் எங்கே செல்கிறோம் என்று தோன்றுகிறது.

மக்களுக்காக போராட வேண்டியது நிறைய உள்ளது. தென்றல்களாக மக்களுக்கு பயன்படுவர்களாக நாங்கள் உள்ளோம். அதில் அவதூறாக பேசுபவர்கள் பதர்களாக உள்ளவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். பாலு போன்றவர்களுக்கு பதில் அளிக்க விருப்பமில்லை. பொய் பொய்யாக பேசுபவர்களுக்கு பதில் கூறுவது என்னுடைய தரத்திற்கு ஏற்றது இல்லை. பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருப்பு முனையை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

* அம்பேத்கர் நூல்களை அரசு வெளியிட வேண்டும்

‘’அம்பேத்கர் குறித்த 17 தொகுதிகளை உள்ளடக்கிய நூலை வெளியிட்ட அமைச்சர் சாமிநாதனை பாராட்டுகிறேன். இதுபோன்று அம்பேத்கர் குறித்த நூல்களை அனைவரும் தெரிந்து கொள்ள தொடர்ந்து தமிழக அரசு வெளியிட வேண்டும்’’ என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.