Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாமகவில் தொடரும் தந்தை-மகன் மோதல் அன்புமணியின் செயல் தலைவர் பதவியை பறிக்க ராமதாஸ் முடிவு: பொதுக்குழு சட்ட விரோதம் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

சென்னை: பாமகவில் தந்தை-மகன் மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு முன்பாக அன்புமணியின் செயல் தலைவர் பதவியை பறிக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் தனது சட்ட குழுவுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதமும் அனுப்பி உள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பாமக தற்போது இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், அன்புமணி அணி, கட்சி பொதுக்குழு, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை கோரி ஆர்ப்பாட்டம் என்று ஒரு புறம் பரபரப்பாக இயங்கி வருகிறது. மறுபுறம் ராமதாஸ் அணியோ, மகளிர் மாநாடு, பொதுக்குழு என்று தனது ஆதரவாளர்களுடன் தனி டிராக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இதனால் பாமக தொண்டர்கள் உச்சகட்ட குழப்பத்திலும், வேதனையிலும் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, பிரசார வியூகம், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கு மாறாக, ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் மாறி மாறி நிர்வாகிகள் நியமிப்பதில் தொடங்கி போட்டி பொதுக்குழுவை நடத்துவது வரை காய் நகர்த்தி வருகின்றனர்.

அன்புமணியின் தலைவர் பதவி கடந்த மே 28ம் தேதியோடு முடிந்தது. இதன் பின்னர், மே 29ம்தேதி ராமதாஸ் அந்தப் பதவியில் பொறுப்பேற்றார். அப்போது, ராமதாஸ் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில், ‘‘நான் தான் பாமகவின் தலைவர், கட்சியின் சின்னத்தை நான் மட்டுமே பயன்படுத்த முடியும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அன்புமணியை தலைவர் பதவியில் நீக்கி, அன்புமணி இனி பாமக செயல் தலைவராக செயல்படுவார் என்றும் அதிரடியாக அறிவித்தார்.

இதனால் கட்சியினர் மத்தியில் குழப்பமான நிலை உருவாகியது. நிர்வாகிகள் பலர் வேறு கட்சிகளுக்கு தாவும் நிலை ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அன்புமணி அணி தரப்பில் கடந்த வாரம் மாமல்லபுரத்தில் பொதுக்குழு நடத்தப்பட்டது. அப்போது, தலைவர் பதவி காலியாகிவிட்டதால், அன்புமணிக்கு பொதுக்குழு கூட்ட அனுமதியில்லை என்று ராமதாஸ் புகார் எழுப்பினர். இதுதொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அதில் பொதுக்குழு நடத்த தடை இல்லை என்று உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து அன்புமணி அணியால் நடைபெற்ற பொதுகுழுவில், பாமக தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் மீண்டும் அன்புமணி பாமக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, அன்புமணி நடத்திய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புமணி அணி சார்பில் வினோபா என்பவர் தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அன்புமணியின் இந்த அடுத்தடுத்த நகர்வுகள் ராமதாஸ் அணியை கடும் கோபத்துக்குள்ளாக்கியது. இதனால் அன்புமணிக்கு பதிலடி கொடுக்க ராமதாஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதம் என்று தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அணி கடிதம் அனுப்பியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ் சார்பில் அவரது உதவியாளர் சுவாமிநாதன் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நேற்று எழுதிய கடிதத்தில், “கட்சியின் பெயரில் தனிப்பட்ட லாபத்துக்காக அன்புமணி செயல்பட்டு வருகிறார். அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க அல்லது சஸ்பெண்ட் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சி விதி 13ன் படி பொதுக்குழு, செயற்குழுவுக்கு கட்சி நிறுவனரே ஒப்புதல் தரவேண்டும். ஆனால் அவரின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக பொதுக்குழு கூட்டம் நடந்துள்ளது.

இது சட்டவிரோதமானது. அதில் தன்னைத்தானே தலைவர் என அறிவித்தது செல்லாது. ராமதாஸ் கட்சியின் தலைவராக பதவியேற்றதில் இருந்து அன்புமணிக்கு எந்த அதிகாரமும் இல்லை. தலைவர் பதவிக்காலம் முடிந்த நிலையில், நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் ஓராண்டு நீட்டிக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்ப்பட்டுள்ளது கட்சிகளின் விதிகளுக்கு முரணானது.

எனவே கட்சி நிறுவனருக்கு அழைப்பு விடுக்காமல் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். மேலும் தொடர்ந்து கட்சிக்கு எதிராக சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வரும் அன்புமணியிடம் விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அன்புமணி அணி பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடித்துவிட்ட நிலையில், இவருக்கு போட்டியாக வரும் 17ம்தேதி போட்டி பொதுக்குழுவை நடத்த ராமதாஸ் முடிவு செய்துள்ளார்.

பொதுக்குழுவை பொறுத்தவரை செயல் தலைவராக அன்புமணியை ராமதாஸ் அறிவித்துள்ளதால், அவரை பொதுக்குழுவுக்கு முறைப்படி அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், பொதுக்குழுவுக்கு அன்புமணியை அழைக்க ராமதாஸ் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதற்காக அன்புமணியை செயல் தலைவர் பதவியில் இருந்து தூக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக அவர் தனது சட்டக்குழுவுடன் தொடர்ந்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு முன்பாக அன்புமணியின் செயல் தலைவர் பதவி பறிக்கப்படும் என்று ராமதாஸ் அணி ஆணித்தரமாக சொல்லி வருவதால் பாமகவில் மீண்டும் மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.