* 21 பேர் கும்பலுடன் தனிக்கட்சி தொடங்கிடு அதுதான் உனக்கு நல்லது
* நான் ஐசியூவில் இல்லை மாடு மேய்க்கிறவன் கூட இப்படிலாம் பேச மாட்டான்
திண்டிவனம்: பாமகவுக்கும், அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர் 21 பேருடன் சேர்ந்து தனிக்கட்சி தொடங்கலாம் என்று ராமதாஸ் தெரிவித்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்காக கடந்த 5ம்தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது ராமதாசை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். சிகிச்சை முடிந்து கடந்த 7ம்தேதி ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது அவர் எனக்கு எந்த குறையும் இல்லை, நன்றாக இருக்கிறேன், மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி 12ம்தேதி வரை ஓய்வெடுத்தபின் அனைவரையும் சந்திப்பேன் என்று கூறியிருந்தார். அதன்படி ஓய்வுக்குபின் கடந்த சில தினங்களாக கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 12 வருஷத்துக்கு முன்பாக எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு எனது ரத்தக் குழாய்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிய நானே பரிசோதனைக்காக சென்னைக்கு சென்றேன். ஒருநாள் சிகிச்சைக்குபின் வீடு திரும்பினேன். அனைத்து கட்சியினரும் நலம் விசாரித்தனர். ஒருகட்சியை தவிர, அதுவும் இப்போது புதிதாக ஆரம்பித்த கட்சி. மருத்துவர்கள் சொன்னபடி எல்லோரும் பார்க்கும்படி ஒரு வார்டில் நான் இருந்தேன். நான் ஐசியுவில் இல்லை.
அதாவது ஐ.சி.யுக்கு செல்லும் வகையில் அதிகளவில் அக்கறை எடுக்கும் நிலைக்கு நான் செல்லவில்லை. ஒருமணிநேரம் ஐசியுவில் இருப்பார். அதன்பிறகு ரூமிற்கு வந்துவிடுவார், நான் மருத்துவரிடம் பேசியிருக்கிறேன். இன்னும் 2 நாள் ஓய்வெடுக்கணும் அப்படின்னு, ஒருவர் (அன்புமணி) சொல்லி இருக்கிறார். அதை நான் கட்சி என்று சொல்லமாட்டேன், அது ஒரு கும்பல். அந்த கும்பலுக்கு சிலநாட்களாக தலைவராக இருப்பவர். அவர் பேசிய பேச்சுகள் தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் உலுக்கி இருக்கும், உறுத்தி இருக்கும். அய்யாவுக்கு எதாவது ஒண்ணு ஆச்சுன்னா தொலைத்து போட்டு விடுவேன். சும்மா இருக்க மாட்டோம், வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கிறோம் என நினைத்தாங்கன்னா, அய்யா விஷயத்தில் நாடகம் ஆடிக்கிட்டு இருக்கிறானுங்க, துப்பு இல்லாதவனுங்க என்று கூறியிருக்கிறார்.
சாதாரணமாக, படிக்காத ஒரு மாடு மேய்க்கிற சிறுவன்கூட இப்படிப்பட்ட வார்த்தைகளை, கோபத்தை, சொற்களை கொட்டியிருக்க மாட்டான். அதனால்தான் முன்னதாகவே சொல்லி இருந்தேன். இவருக்கு (அன்புமணி) தலைமைப் பண்பு இல்லை என்று. அதுதான் இந்த பேச்சு. நான் யாருக்கும் தெரியக்கூடாது என்று தான் மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால் தமிழ்நாடு முழுக்க அரசியல் தலைவர்களுக்கு சென்றுவிட்டது. ஒரு தலைவர் என்று சொன்னால் யார் வேண்டுமானாலும் வரலாம், பார்க்கலாம். நான் அப்படிப்பட்ட பரவக்கூடிய வியாதியில் இல்லை. 80 பேர் வரை பார்த்தேன். சென்னையில் சில நாள் ஓய்வெடுத்தபின் தைலாபுரம் திரும்பினேன்.
பாமகவை தோற்றுவித்தது, உழைத்ததும், அதற்கு சொந்தக்காரனும் நான்தான். 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று ஓடோடி உழைத்து இந்த இயக்கத்தை வளர்த்தேன். இப்போது அந்த கொடியை இவர் வைத்துக் கொண்டு உரிமை கொண்டாடுவது தவறு. இதற்காக வழக்கு, நீதிமன்றம், ஆணையத்தை நாம் சந்திப்போம். இப்படியெல்லாம் நடக்கும் என்று எனக்கு தெரியாது. பாமகவுக்கும், அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சியின் பெயருக்கும், கொடிக்கும் அவருக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. நான் அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன். நீ ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்.
அது உனக்கும் நல்லது, உன்னை சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது. அதனால் சிலருக்கு கட்சியில் பொறுப்புகள் கூட கிடைக்கலாம். ஆனால் பதவிகள் கிடைக்காது, அது கிடைக்கவும் வாய்ப்பில்லை. ஆனாலும் எனது வளர்ப்பு சரியாக இருந்தது, இருக்கிறது என்றால் அவர் 21 பேர் சேர்ந்து ஒரு கட்சியை ஆரம்பித்து விடலாம். ரொம்ப பிரமாதமாகவே அந்த கட்சி இருக்கும், பிரம்மாண்டமாகவும் இருக்கும். கடந்த 6, 8 மாதத்தில் அவரிடம் பலமுறை இதை சொல்லி இருக்கிறேன். அவர் இனிஷியல் வேண்டுமென்றால் போட்டுக் கொள்ளலாம் ஆர்.அன்புமணி என்று. அதற்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. நான் 46 வருஷம் அலைந்து திரிந்து வளர்த்த கட்சி. ஆனால் இப்போது, என் கட்சி என்று சொன்னால் எப்படி?. இது எப்படி நியாயமாகும். அதனால்தான் இன்றைக்கும் சொல்றேன். தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள். கொடியை பயன்படுத்தக் கூடாது, கட்சியின் பெயரை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். அனைத்து கட்சியினரும் நலம் விசாரித்தனர். ஒருகட்சியை தவிர, அதுவும் இப்போது புதிதாக ஆரம்பித்த கட்சி.
* தந்தை, தாயை காப்பாற்றாதவரு....
‘தந்தையையும், தாயையும் காப்பாற்றாத மகன் தமிழகத்தை எப்படி காப்பாற்றுவார் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறியிருப்பது, 100க்கு 101 அளவில் உண்மை. அவர் மட்டுமா?. தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள், பிற கட்சிகளின் தலைவர்கள் என எல்லோருடைய கருத்தும் இதுதான்’ என்று ராமதாஸ் தெரிவித்தார்.
* டிச.30 பொதுக்குழுவுக்குபின் கூட்டணி குறித்து முடிவு
ராமதாஸ் அளித்த பேட்டியில், ‘கட்சியின் பொதுக்குழு வழக்கம்போல் கூடி எங்கள் கூட்டணி குறித்து முடிவு செய்யும். டிசம்பர் 30 பொதுக்குழு கூடி எனக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை கொடுப்பார்கள். நான் சரியாக முடிவெடுத்து, அதாவது மக்கள், கட்சியினர் என்ன நினைக்கிறார்களோ அந்த முடிவை நான் எடுப்பேன். இந்த முறை சரியாகவே இருக்கும் என்றார். சட்டசபையில் 2 நாளாக ஜி.கே.மணியை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென, 3 எம்எல்ஏக்கள் போராடுகிறார்களே என்று கேட்டதற்கு, அவரையும், கொறடா அருளையும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. சபாநாயகரால் மட்டுமே எதையும் செய்ய முடியும். அவரிடம்தான் பவர் இருக்கிறது’ என்று ராமதாஸ் பதில் அளித்தார்.