Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாமகவில் இருந்தே நீக்கப்பட்டதாக ராமதாஸ் கூறிய நிலையில், தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை!!

கடலூர் : பாமகவில் இருந்தே நீக்கப்பட்டதாக ராமதாஸ் கூறிய நிலையில், தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். டங்ஸ்டன் தொடர்பான அறிக்கையில் தன்னை தலைவர் என்ற குறிப்பிட்டுள்ளார் அன்புமணி. அன்புமணி வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு..

டங்க்ஸ்டன், அணுக்கனிமங்கள் உள்ளிட்ட 30 வகை கனிமச் சுரங்கம் அமைக்க மக்கள்கருத்து தேவையில்லை என்பது தவறு: மத்திய அரசு ஆணை திரும்பப் பெறப்பட வேண்டும்! : பாமக தலைவர் அன்புமணி!!

இந்தியாவில் டங்ஸ்டன், தாமிரம், நிக்கல், பிளாட்டினம் உள்ளிட்ட 24 வகையான முக்கியக் கனிமங்களையும், தோரியம், யுரேனியம், மோனசைட் உள்ளிட்ட 6 வகையான அணுக் கனிமங்களையும் தோண்டி எடுப்பதற்கான சுரங்கங்களை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்களை நடத்தத் தேவையில்லை என்றும், இவற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை இனி மத்திய அரசே வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்புக்கும்,வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இது தொடர்பாக கடந்த 8-ஆம் தேதி பிறப்பித்துள்ள அலுவலகக் குறிப்பாணை இப்போது தான் வெளிவந்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு மாநிலங்களின் உரிமைப் பறிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, எந்தவொரு திட்டத்தையும் ஏற்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து கருத்து தெரிவிக்க மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தையும் பறிக்கும் செயலாகும். இதை ஏற்க முடியாது.

அண்மையில் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பகுதியில் 2015 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தூத்துக்குடி பகுதியை சீரழித்த வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு பா.ம.க. முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்திலும் நான் பங்கேற்று இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் நாடகங்களை சுட்டிக்காட்டிய பிறகு அத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு காரணம் அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பும், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டால் அதற்கு மக்களின் ஆதரவு கிடைக்காது என்ற அச்சமும் தான்.

அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் 1144 ஏக்கர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி கோரும் மத்திய அரசின் விண்ணப்பத்தின் மீது பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்த கருத்துக்கேட்புக் கூட்டம் பொதுமக்களின் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தை இன்று வரை தமிழக அரசால் நடத்த முடியவில்லை.

மத்திய அரசு பிறப்பித்துள்ள ஆணையின்படி டங்ஸ்டன் சுரங்கம், கிள்ளியூர் அணுக்கனிம சுரங்கம் ஆகியவற்றை மக்களின் கருத்துகளையோ, மாநில அரசின் கருத்துகளையோ கேட்காமல் அமைத்து விட முடியும். அணுக்கனிம சுரங்கங்கள் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை அணுக்கதிர்வீச்சு ஆபத்துக்கும், புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட நோய் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். அதேபோல், பிற சுரங்கங்கள் மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும். மக்களைக் காக்க வேண்டிய அரசே இதை செய்யக்கூடாது.

எனவே, அணுக்கனிமங்கள் மற்றும் முக்கியக் கனிம சுரங்கங்களை அமைக்க பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்களை நடத்தத் தேவையில்லை; இவற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை இனி மத்திய அரசே வழங்கும் என்ற ஆணையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த சுரங்கங்களையும் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.