நெமிலி: மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி என இன்னும் சில மாதங்களில் முடிவெடுக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார். ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நெமிலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் ஒவ்வொரு சாதியிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை அரசு வழங்கவேண்டும். எனவே விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். வரும் டிசம்பர் 12ம் தேதி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல், வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குதல் என்ற இருகோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி என இன்னும் சில மாதங்களில் முடிவெடுக்கப்படும். அந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். அதுவரையில் கட்சியை வளர்க்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட வேண்டும். பெண்களிடம் ஆக்கல், காத்தல் மற்றும் தீமைகளை அழித்தல் ஆகிய மூன்று சக்திகள் உள்ளது. எனவே, ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று உறுதியாக இருக்க வேண்டும். பெண்கள் உறுதியாக இருந்தால் நல்லாட்சி அமையும் என்றார்.


